பிரதிநிதித்துவப்படம் 
இந்தியா

55 வயதுக்கு மேற்பட்ட போலீஸாருக்கு விடுமுறை: கரோனாவிலிருந்து காக்க மும்பை போலீஸார் நடவடிக்கை

பிடிஐ

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து காக்கும் வகையில் 55 வயதுக்கு மேற்பட்ட அனைத்து போலீஸாரும், ஏற்கெனவே உடல்ரீதியாக பிரச்சினை உள்ளோரும் விடுப்பில் செல்லலாம் என்று மும்பை போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.

விடுப்பில் செல்லும் போலீஸாரின் ஊதியம் ஏதும் பிடிக்கப்படாது. கரோனாவிலிருந்து அவர்களைப் பாதுக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மும்பை காவல்துறையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்

மகாராஷ்டிர மாநிலம் கரோனா வைரஸால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை மகாராஷ்டிராவில் 369 பேர் பலியாகியுள்ளனர். 8,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தலைநகர் மும்பையில் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 3 போலீஸார் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு 55 வயதுக்கு மேற்பட்ட போலீஸாருக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மும்பை காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த சில நாட்களாக நடந்த நிகழ்வுகளை ஆய்வு செய்தோம். 3 போலீஸார் அடுத்தடுத்து கரோனாவில் உயிரிழந்தனர். இன்னும் பலர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவருமே 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதைக் கருத்தில் கொண்டு போலீஸாரையும், அவர்களின் குடும்பத்தினரையும் காக்க வேண்டி 55 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல்ரீதியாக நோயால் பாதிக்கப்பட்டவர்களை விடுப்பு எடுத்துச் சென்று வீட்டில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டால் மீள்வது கடினம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் 20 அதிகாரிகள் உள்பட 107 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் மும்பை போலீஸார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT