பெங்களூருவில் பிச்சையெடுக்கும் குழந்தைகளை மீட்பதற்காக ‘ஆபரேஷன் ஸ்மைல்’ என்ற திட்டத்தை போலீஸார் அறிமுகம் செய்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 2 நாட்களில் சுமார் 500 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
பெங்களூருவில் பிச்சை யெடுக்கும் குழந்தைகள் அதிகரித்து வருவதால் இவர்களை மீட்கவும் குழந்தைகளை பிச்சை எடுக்க தூண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் கர்நாடக அரசு முடிவு செய்தது. இதை யடுத்து ‘ஆபரேஷன் ஸ்மைல்’ என்ற பெயரில் புதிய திட்டத்தை பெங்களூரு மாநகர போலீஸார் கடந்த வியாழக்கிழமை அறிமுகப் படுத்தினர்.
இத்திட்டத்தின் கீழ் நகரின் அனைத்துப் பகுதிகளிலும் மகளிர் போலீஸார், ஊர்க்காவல் படையினர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவி யுடன் காவல் துறையினர் கடந்த வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதில் 48 பச்சிளம் குழந்தைகள் உட்பட 490 சிறுவர் - சிறுமிகள் மீட்கப்பட்டனர். குந்தைகளை பிச்சையெடுக்க வைத்த 85 பெண்கள் உட்பட 103 பேரை போலீஸார் கைது செய்தனர். மீட்கப்பட்ட குழந்தைகள் மாகடி சாலையில் உள்ள பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பெங்களூரு மாநகர கூடுதல் ஆணையர் ஹரிசேகரன் 'தி இந்து'விடம் கூறியதாவது:
“நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏழைக் குழந்தைகளை கடத்தி வந்து, சித்திரவதை செய்து பிச்சையெடுக்க வைப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் சாலையோரம் வசிப்பவர்களிடம் அவர்களது குழந்தைகளை வாடகைக்கு பெற்று வந்து, காலை முதல் இரவு வரை பிச்சையெடுக்க வைப்பதையே ஒரு கும்பல் தொழிலாக செய் கிறது. இதற்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 முதல் ரூ.300 வரை கூலியும் கொடுக்கின்றனர். இதனை தடுக்கும் விதமாகவே, ‘ஆபரேஷன் ஸ்மைல்' தொடங் கப்பட்டுள்ளது. குழந்தை களை கட்டாயப்படுத்தி பிச்சை யெடுக்க வைப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்''என்றார்.
பெங்களூரு போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதிலும் ஏராளமானோர் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ‘ஆப ரேஷன் ஸ்மைல்' திட்டத்தைப் பாராட்டி பதிவிட்டுள்ளனர்.