நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு, நோயாளிகளுக்கு சிகிச்சை, நோய் தடுப்புப் பணி மற்றும் தூய்மைப் பணிகளில் 1.2 கோடி பேர் போராடி வருவதாக மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்தது.
இந்த 1.2 கோடி பேரில் 42.7 லட்சம் பேர் (32% ) மட்டுமே மருத்துவர்கள், செவிலியர்கள் என நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் நேரடியாக தொடர்புடையவர்கள். இதிலும் 11.6 லட்சம் (9%) பேர் மட்டுமே மருத்துவர்கள். இதிலும் மருத்துவர்களில் 50% பேரும், செவிலியர்களில் 42% பேரும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத் 5 மாநிலங்களில் மட்டுமே உள்ளனர். இந்த எண்ணிக்கை மருத்துவ பணியாளர்களின் சமநிலையின்மையை காட்டுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பொது சுகாதார நிறுவனத்தின் சுகாதார ஆய்வாளர் மருத்துவர் ரசாந்த் ஹனிவாஸ் கூறும்போது, "மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மாநிலங்களிடையே சமமாக இல்லை என்பதையும் பல மாநிலங்களில் போதுமான மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே நகரங்கள், கிராமங்களுக்கு இடையே பல்வேறு அம்சங்களில் வேறுபாடுகள் இருக்கும் நிலையில், தேவை உள்ள மாநிலங்கள், மற்றும் உள்ளடங்கிய பகுதிகளை அடையாளம் கண்டு போதுமான மருத்துவர்களை நியமித்து கரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்" என்றார்.