கேரளத்தில் கரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதற்கு அம்மாநில மக்கள், அரசின் உத்தரவுகளை மதித்து நடப்பதும் ஒரு முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தனிமனித விலகலை உறுதி செய்யும் வகையில், வீட்டைவிட்டு வெளியே வருபவர்கள் கட்டாயமாகக் குடைபிடித்து வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது கேரளத்தின் தண்ணீர்முக்கோம் பஞ்சாயத்து.
கேரளத்தின் ஆழப்புழா மாவட்டத்தில் இருக்கிறது தண்ணீர்முக்கோம். கேரளத்தில் கரோனா ஹாட் ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக இருந்த இந்தப் பகுதி, அண்மையில் புதிதாக கரோனா தொற்று யாருக்கும் இல்லாததால் அந்தக் கண்டத்திலிருந்து விலகியிருக்கிறது. இந்நிலையில், இங்குள்ள மக்கள் தனிமனித விலகலைக் கடைப்பிடிக்க வித்தியாசமான முயற்சி ஒன்றைக் கையில் எடுத்துள்ளது தண்ணீர்முக்கோம் பஞ்சாயத்து.
ஆம், வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் முகாபரணம் அணிவதோடு மட்டுமல்லாமல் கட்டாயமாகக் குடைபிடித்தபடிதான் நடக்கவோ, கடைகளில் நிற்கவோ வேண்டும் என்பதாகத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது இந்தப் பஞ்சாயத்து. தண்ணீர்முக்கோம் பஞ்சாயத்தின் இந்தத் திட்டத்தை கேரள அமைச்சர்கள் தாமஸ் ஐசக், மொய்தீன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கேரளம் அதிக அளவில் மழைப் பொழிவு கிடைக்கும் பகுதி என்பதால் இயல்பாகவே இங்கு வீட்டுக்கு வீடு குடை இருக்கும். அதனால் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதும் எளிதானதாக இருக்கும் என்கின்றனர் இந்த கிராம மக்கள். இதேபோல், மகளிர் குழுக்களின் மூலம் கிராம மக்களின் வசதிக்காக இப்போது குடை தயாரிப்பும் தீவிரமாக நடந்துவருகிறது. அதைக் கூட்டுறவு சங்கத்தின் மூலம் கொள்முதல் செய்து கிராம மக்களுக்கு 20 சதவீத மானியத்தில் வழங்கி வருகின்றனர். குடையை ரொக்கமாகக் கொடுத்து வாங்கமுடியாத பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு வாரம் 10 ரூபாய் தவணையிலும் குடைகளை வழங்குகிறார்கள்.
குடை பிடித்தபடி நிற்கவோ, நடக்கவோ செய்யும் போது குடைகள் ஒன்றுடன் ஒன்று தொடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இயல்பாகவே மக்களுக்குள் ஒரு மீட்டர் அளவுக்கேனும் தனிமனித விலகல் இருக்கும் என்பதால் இந்தத் திட்டம் கேரளத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.