டெல்லி டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனை. 
இந்தியா

கரோனா சிகிச்சை அளித்துவந்த டெல்லி மருத்துவமனையின் 29 ஊழியர்களுக்கும் பாதிப்பு

ஏஎன்ஐ

டெல்லியில் கரோனா சிகிச்சை அளித்துவந்த ஒரு மருத்துவமனையின் 29 ஊழியர்களுக்கும் கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரோனா சிகிச்சையில் மருத்துவ ஊழியர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், முன்னணி போர்க்கள வீரர்களாகத் திகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லி மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 29 சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது எனும் அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நொய்டாவில் உள்ள தேசிய உயிரியல் நிறுவனம் (National Institute of Biologicals) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''டெல்லியில் கரோனா சிகிச்சைக்காக ஆறு மருத்துவமனைகள் /பிளாக்குகள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஏப்ரல் 10-ம் தேதி டெல்லி அரசு அறிவித்தது. அதில் டெல்லி ரோகிணி பகுதியில் உள்ள ஆறாவது செக்டரில் மெட்ரோ ஸ்டேஷன் அருகே பகவான் மகாவீர் மார்க்கில் அமைந்துள்ள டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனையும் ஒன்று. இதில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், துறை மருத்துவர்கள் மற்றும் பிற ஊழியர்கள் உட்பட 29 சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது''.

இவ்வாறு தேசிய உயிரியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT