அசாம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சிக்கியவர்கள் சொந்த ஊர் திரும்ப 3 நாட்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காமரூப் மாவட்டம் அமிங்கான் நகரில் சமூக இடைவெளியை கடைபிடித்து பேருந்துக்காக காத்திருந்த பொதுமக்கள்.படம்: பிடிஐ 
இந்தியா

அசாமில் மக்கள் சொந்த ஊர் செல்ல 3 நாட்களுக்கு பேருந்து இயக்கம்

செய்திப்பிரிவு

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் வேறு மாநிலங்களிலும், தங்கள் மாநிலத்திலேயே வேறு ஊர்களிலும் பணியாற்றும் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.

அசாமில் வெவ்வேறு ஊர்களில் சிக்கித் தவிக்கும் மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப வசதியாக 3 நாட்களுக்கு மட்டும் மாநிலத்துக்குள்ளேயே அரசு பேருந்துகளை இயக்க அசாம் அரசு முடிவு செய்தது. இதன்படி, கடந்த சனிக்கிழமை முதல் அரசுப்பேருந்துகள் இலவசமாக இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர மோகன் படோவரி கூறும்போது, ‘‘தொலைபேசி உதவி எண்கள் மூலம் இதுவரை 41 ஆயிரம் பேர் சொந்த ஊர் திரும்புவதற்காக தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (நேற்று) 11 ஆயிரம் பேர் 700 அரசுப்பேருந்துகளில் வெவ்வேறு இடங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு ஒரு பேருந்தில் 15 முதல் 20 பயணிகள் வரைமட்டுமே செல்கின்றனர். திங்கட்கிழமை (இன்று) வரை பேருந்துகள் இயக்கப்படும். அசாமில் உணவு விநியோக சங்கிலி சிறப்பாக செயல்படுகிறது. மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் உணவுப் பொருள் தட்டுப்பாடு இல்லை’’ என்றார்.

SCROLL FOR NEXT