இந்தியாவில் கடந்த 19-ம் நூற்றாண்டின் இறுதியிலும், 20-ம் நூற்றாண்டின் தொடக்க கால கட்டத்திலும் பிளேக் மற்றும் காலரா நோய் வேகமாக பரவியது. இதற்கு அப்போது மருந்து கண்டு பிடிக்காத காரணத்தால் பலர் உயிரிழந்தனர். இப்போதைய கரோனா தொற்றை போல, பயத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் தங்களை பாதுகாத்து கொண்டனர்.
இந்த நோயை ஒழிக்க அப்போதே ஹைதராபாத் நிஜாம் மன்னர்களும், ஆங்கிலேய அரசும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. காலரா, பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. அங்கு நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. முக்கியமாக வெளியில் செல்ல வேண்டி இருந்தால் அவர்களுக்கு ’காலரா பாஸ்’ கொடுத்துசிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், வெளி மாநிலங்களில் பணியாற்றும் கூலி தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பும் பிரச்சினை அப்போதும் இருந்தது.
காலரா நோயின் போது, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கவில்லை என்றாலும், பல மாநிலங்களில் மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டது. இந்த கால கட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு 32 நாட்கள் வரை முன்பணம் வழங்கி விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. நோய்கள் பரவிய பகுதிகள் பிரிக்கப்பட்டு, அங்கு ராணுவ வீரர்களின் பாதுகாப்பு போடப்பட்டது. போக்குவரத்தும் காலரா நோய் அதிகமாக இருந்த பகுதிகளில் தடை செய்யப்பட்டது.
சிம்லா ஒப்பந்தம், கோப்பு எண் 120, 1897-ன் படி, கடந்த 1897-ம் ஆண்டு மார்ச் 20-ல் ஆங்கில அரசுஅதிகாரிகள், வருவாய், விவசாயத் துறை அதிகாரிகள் மற்றும் இந்தியகாப்பக துறையினர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் காலராநோய் பரவாமல் தடுக்க 32 நாட்கள் தங்களது அரசு ஊழியர்கள் மற்றும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்தது.