மக்களுக்குத் தீவிரமான பரிசோதனைகளைச் செய்யாவிட்டால் கரோனா வைரஸுக்கு எதிரான சவாலான போரில் நாம் வெல்ல முடியாது. புலம்பெயர் தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொள்ளுங்கள் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு லாக் டவுனைச் செயல்படுத்தி வருகிறது. பரிசோதனைகளையும் தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கரோனாவுக்கு எதிரான போரில் மத்திய அரசு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மூத்த தலைவர்கள் பேசிய வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வீடியோவில் கூறுகையில், “ கரோனா வைரஸுக்கு எதிரான சவாலான போரில் மக்களுக்குப் பரிசோதனை செய்வதற்கான வசதிகளில் பற்றாக்குறை பிரச்சினைகள் இருக்கின்றன. தீவிரமான பரிசோதனைகள், பரிசோதனை வசதிகளை விரைவுபடுத்தாவிட்டால், போரில் நாம் வெல்ல முடியாது. தேடுதல், பரிசோதனை செய்தல் மூலமே கரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய ஆயுதங்களாகும். புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் மனிதநேயம், பாதுகாப்பு, நிதிவசதி போன்றவை அவர்களை நாம் அணுகும் வழிமுறைகளாகும்” எனத் தெரிவித்துள்ளார்.\
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில், “புலம்பெயர் தொழிலாளர்களைப் பாதுகாக்க காங்கிரஸ் கட்சி பரந்த அளவில் செயல் திட்டம் உருவாக்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களைப் பாதுகாக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மாநில அரசுகள் புலம்பெயர் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்கிறார்கள் என்பதை ஏற்கிறோம்.
ஒவ்வொரு மாநில அரசும் ஒவ்வொரு விதமான நடவடிக்கை மூலம் இந்தப் பிரச்சினைகளைக் கையாள்கின்றனர்.
புலம்பெயர் தொழிலாளர்களை நாம் பாதுகாக்க வேண்டும். புலம்பெயர்தல் அவர்களுடைய பிரச்சினை அல்ல, மத்திய அரசுடையது. புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் இரு மாநிலங்கள் தொடர்பானது. அதில் இரு அரசுகளும் பேச வேண்டும்” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறுகையில், “புலம்பெயர் தொழிலாளர்கள் எங்கிருந்து வந்தார்களோ அங்கே செல்ல விட்டுவிட வேண்டும். அதற்கான வழிகளைக் காண வேண்டும். அவர்கள் எங்கு செல்வது எனத் தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு தானியமும், பணமும் வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.