கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்போர் விகிதம் தற்போது 3.1 சதவீதமாக உள்ளது என்றும், நோயிலிருந்து குணம் அடைவோர் எண்ணிக்கை 20% ஆக உள்ளது என்றும் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மத்திய அமைச்சர்கள் இன்று கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது கரோனா தாக்குதல் வேகமாக இரட்டிப்பாகும் பகுதிகள், மரண விகிதம் அதிகமாக இருக்கும் மாவட்டங்கள் மீது மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது:
‘‘கரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு 5602 பேர் இந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இது 20.66% சதவீதம் ஆகும் என்று அமைச்சர்களிடம் தெரிவிக்கப்பட்டது. நேற்று முதல் புதிதாக 1429 பேர் கோவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 24 ஆயிரத்து 506 பேருக்கு கோவிட் 19 நோய் உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்போர் விகிதம் தற்போது 3.1 சதவீதமாக உள்ளது என்றும், நோயிலிருந்து குணம் அடைவோர் எண்ணிக்கை 20% ஆக உள்ளது.
இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைவாகவே உள்ளது. நாட்டில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவது, தொகுப்பு மேலாண்மை மற்றும் நோய் பரவாமல் தடுப்பதற்கான உத்திகள் ஆகியவற்றால் இவ்வாறு நேர்மறை விளைவு ஏற்பட்டுள்ளது என்று கொள்ளலாம். நாட்டில், கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இருமடங்காக அதிகரிப்பதற்கு, தற்போது சராசரியாக 9.1 நாட்கள் எடுக்கிறது.’’ எனக் கூறினார்.