அவந்திபோராவின் கோரிபோரா பகுதியில் முகாமிட்டுள்ள பாதுகாப்புப் படையினர் : படம் | ஏஎன்ஐ. 
இந்தியா

காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் உள்பட 3 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படையினர் அதிரடி

பிடிஐ

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் இரு தீவிரவாதிகள், தீவிரவாதிகளின் உதவியாளர் என 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து பாதுகாப்புப் படையின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ''காஷ்மீரின் தெற்குபகுதியான புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோராவில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவந்திபோராவின் கோரிபோரா பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதலில் இறங்கினர்.

அப்போது ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அவர்கள் சரணடைய வேண்டும் என்று பாதுகாப்புப் படையினர் கோரினர். ஆனால், தீவிரவாதிகள் தொடர்ந்து துப்பாக்கியால் சுடவே, பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். இருதரப்பினருக்கும் இடையே நீண்ட நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு தீவிரவாதிகளும், அவர்களின் உதவியாளர் ஒருவரும் கொல்லப்பட்டனர்.

இன்னும் அந்தப் பகுதியில் தேடுதல் நடந்து வருகிறது. இந்தத் தீவிரவாதிகள் யார், எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர்களிடம் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள், கையெறி குண்டுகள், பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT