தலைநகர் டெல்லியில் உள்ள லேடி ஹர்திங்கே மருத்துவமனையில் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் கைதட்டி ஆரவாரத்துடன் உற்சாகத்துடன் கொண்டாடியது ஏன் தெரியுமா? முதல் பேட்ச் கரோனா நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
3 வாரங்களுக்கு முன்னால் கரோனா பாசிட்டிவ் என்று அனுமதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனதில் மருத்துவர்கள் மருத்துவ ஊழியர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
ஒரு மாதத்துக்கு முன்பாகத்தான் இந்த மருத்துவமனையில் கோவிட்-19 சிறப்புப் பிரிவுக்கென்று தனி கட்டிடமே ஒதுக்கப்பட்டது. முதலில் 20 வயதிலிருந்து 30 வயதுடைய கரோனா நோயாளிகள் 4 பேர் இதில் அனுமதிக்கப்பட்டனர்.
“இன்று இவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர், காரணம் இவர்களது பரிசோதனை மாதிரிகள் சிகிச்சைக்குப் பிறகு கரோனா இல்லை என்று வந்தது பெரிய நிம்மதி ஏற்படுத்தியது” என்று டாக்டர் மாத்துர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்தார். இந்த 4 பேரும் கண்ணீர் மல்க நன்றியுடன் முழு குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகிச் சென்றனர் என்றார் மாத்துர்.
பெரிய சவால்கள் காத்திருக்கும் நேர்த்தில் சிறு சிறு வெற்றிகளும் பரவசம்தான் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த 4 நோயாளிகள்தான் முதன் முதலில் இந்த கோவிட்-19 பிளாக் உருவாக்கப்பட்ட பின் வந்த முதல் நோயாளிகள் ஆவார்கள். இவர்கள் பிராணவாயு பலத்துடன் தான் இருமுறை உயிர் பிழைக்க நேரிட்டது, இந்நிலையில் நால்வரும் குணமடைந்தது மகிழ்ச்சியளிக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள். இவர்கள் ஐசியு பக்கம் செல்லவே இல்லை என்பது இன்னொரு சாதனையாகும்.
14 நாட்கள் தனிமைப்படுத்தல் என்பது முக்கியத்துவமற்றதாகியுள்ளது காரணம் கரோனாவின் நடத்தை மாறிக்கொண்டே செல்கிறது. இன்றும் கூட ஐசியு உட்பட 29 படுக்கைகள் கொண்ட இந்த பிளாக் முழுதும் கரோனா நோயாளிகள் இருக்கின்றனர்.