பிரதிநிதித்துவப் படம். 
இந்தியா

மக்கள் ஊரடங்கின்போது டெல்லியில் சிக்கிய ஆர்பிஎஃப் படையினர் 9 பேருக்கு கரோனா வைரஸ்: தென்கிழக்கு ரயில்வே தகவல் 

ஐஏஎன்எஸ்

கடந்த மார்ச் 22-ம் தேதி மக்கள் ஊரடங்கில் சிக்கிய பிறகு டெல்லியிலிருந்து திரும்பிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆர்பிஎஃப் பணியாளர்கள் 9 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தென்கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பரிசோதனையில் கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் தற்போது மேற்கு வங்கத்தில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களோடு தொடர்பிலிருந்து மற்ற ஆர்பிஎஃப் படையினர் அனைவரும் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

''டெல்லியில் இருந்து சில பாதுகாப்பு உபகரணங்களைக் கொண்டு வர அனுப்பப்பட்ட எஸ்.இ.ஆர் கரக்பூர் பிரிவைச் சேர்ந்த 28 பேர் கொண்ட குழுவில் அவர்கள் ஒரு பகுதியாக இருந்தனர். அவர்கள் மிகவும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு வருவதற்காக மார்ச் 22-ம் தேதி மக்கள் ஊரடங்கு உத்தரவுக்கு முன்னர் டெல்லிக்குச் சென்றிருந்தனர். இருப்பினும், லாக் டவுனில் அவர்கள் டெல்லியில் சிக்கித் தவித்தனர். மேலும், அங்குள்ள ஆர்.பி.எஃப் குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டனர்.

ஹவுராவை அடைந்ததும், அவர்கள் 14 நாள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டனர். அவர்கள் வேறொரு மாநிலத்திலிருந்து திரும்பி வந்ததிலிருந்து பரிசோதித்தோம். இதில் 9 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லை. பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்ட அனைவரையும் நாங்கள் சோதித்து வருகிறோம்".

இவ்வாறு தென்கிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதற்கிடையில், மாநிலங்களவையின் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரையன், இந்தச் செய்தி குழப்பமானதாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ஓ பிரையன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு பதிவில், ''இந்தக் குழு ஏப்ரல் 14-ம் தேதி அன்று டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. லாக் டவுனில் கரோனா நோயாளிகள் ஏன் பயணம் செய்தார்கள்? யார் அவர்களை அனுப்பினர்? சோதனை செய்யப்படவில்லையா? எத்தனை பேரை அவர்கள் சந்தித்தார்கள்?" என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT