டெல்லியில் காய் சந்தையில் கடை வைத்திருந்த வியாபாரிக்கு கரோனாவில் உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு 300 கடைகள் மூடப்பட்டு மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக இருப்பது ஆசாத்பூரில் உள்ள காய்கறி, பழங்கள் மண்டி. இங்கு 57 வயதான பலாப்பழ வியாபாரிக்கு கடந்த திங்கள் கிழமை கரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.
இதனால், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர் பரிதாபமாகப் பலியாகி உள்ளார். இதன் காரணமாக வடக்கு டெல்லி மாவட்டமான அதன் துணை ஆட்சியர் தீபக் ஷிண்டே தலைமையில் ஆசாத்பூர் சந்தையில் கண்காணிப்பு தொடங்கப்பட்டது.
இறந்தவரிடம் பணியாற்றிய 20 பணியாளர்கள் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இத்துடன் அவர்களுக்கு கரோனா மருத்துவப் பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.
ஆசாத்பூர் சந்தை வியாபாரிகள் இடையே கரோனா பீதி பரவி உள்ளது. இப்பிரச்சனை தீரும் வரை சந்தையை முழுமையாக மூடி வைக்க அதன் வியாபாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதை ஏற்று சந்தை முற்றிலுமாக மூடி வைப்பதால் அதற்கு காய்கறி மற்றும் பழங்களை விநியோகிக்கும் விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகும். எனவே, சந்தையில் நேரக்கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆலோசனை செய்தது. .
இதனிடையே அந்த சந்தையில் உள்ள 300 கடைகள் மட்டும் மூடப்பட்டுள்ளன. கடைகளை மூடும் முன்பாக உள்ளே இருந்த பொருட்கள் அகற்றப்பட்டன. அதுமட்டுமின்றி சந்தைக்கு மக்கள் வருவதற்கும் பெருமளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.