அர்னாப் கோஸ்வாமி : கோப்புப்படம் 
இந்தியா

ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மீது 3 வாரங்களுக்கு நடவடிக்கை எடுக்கத் தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

பிடிஐ

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ரிபப்ளிக் சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி அவதூறாகப் பேசியதாகக்கூறி காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தனர். இது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் கீழ் அவர் மீது 3 வாரங்களுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் கடந்த 16-ம் தேதி 2 சாதுக்கள் உள்பட 3 பேரை திருடர்கள் என நினைத்து சிலர் அடித்துக் கொன்றனர். இந்த விவகாரம் தொடர்பாக நடந்த தொலைக்காட்சி விவாதத்தில் சோனியா காந்தியை அவதூறாக அர்னாப் கோஸ்வாமி பேசியதாகக் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக மகாராஷ்டிரா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் நூற்றுக்கணக்கான புகார்கள் அளித்தனர். இந்தப் புகாரில் பல்வேறு பிரிவுகளின் கீழ் அர்னாப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி அர்னாப் கோஸ்வாமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் , எம்ஆர். ஷா முன்னிலையில் இன்று காணொலி மூலம் விசாரிக்கப்பட்டது. அர்னாப் கோஸ்வாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கியும், மகாராஷ்டிர அரச சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ராஜஸ்தான் அரசு சார்பில் அபிஷேக் மனு சிங்வி, சத்தீஸ்கர் அரசு சார்பில் விவேக் ஆகியோர் ஆஜராகினர்.

மூத்த வழக்கிறஞர் முகுல் ரோஹத்கி வாதிடுகையில், “அர்னாப் கோஸ்வாமி தான் நடத்தும் சேனல் வாயிலாக பால்கர் தாக்குதல் தொடர்பாக போலீஸாரின் நடவடிக்கைகளை கேள்வி எழுப்பினார். ஆனால் அவருக்கு எதிராக காாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்கள் தலைவரை அவதூறு பேசியதாகக் குற்றம் சாட்டி ஏராளமான புகார்களை போலிஸில் அளி்த்து அதில் வழக்காகப் பதிவு செய்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் மும்பையில் அர்னாப்பையும் அவரின் மனைவியையும் சிலர் தாக்கியுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இதுபோல் அர்னாப் மீது போலீஸில் கொடுக்கப்பட்ட புகார் என்பது பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல். பத்திரிகை சுதந்திரத்தை நசுக்க வேண்டும் எனும் நோக்கில் இந்தப் புகார் கொடுக்கப்பட்டு, பத்திரிகையாளர் பணியைத் தொடரவிடாமல் செய்யும் இடையூறாகும்.

சத்தீஸ்கரில் அவர் ஆஜராக போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். அர்னாப் கோஸ்வாமிக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில், “அர்னாப் கோஸ்வாமி தனது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு தனிமனிதர் குறித்து பேசிய பேச்சு பத்திரிகை சுதந்தரமா? அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 32-ன் கீழ் கோஸ்வாமி மனு கேள்விக்குள்ளாகும். கோஸ்வாமிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்களை போலீஸார் விாசரிக்க அனுமதிக்க வேண்டும். எந்தவிதமான பாதுகாப்பும் வழங்கப்படக்கூடாது.

காங்கிரஸ் கட்சியினரே புகார் அளித்திருந்தாலும் எந்தp பிரச்சினையும் இல்லை, அவதூறு புகார் தொடர்பாக பாஜகவின் புகாரில் ராகுல் காந்தி நீதிமன்றம் சென்றாரே” எனத் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள் அமர்வு, ''பல்வேறு மாநிலங்களில் அர்னாப் கோஸ்வாமி்க்கு எதிராகப் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதே'' எனக் கேட்டனர்.

ராஜஸ்தான் அரசுசார்பில் ஆஜராகிய அபிஷேக் மனு சிங்வி, “அர்னாப்புக்கு பாதுகாப்பு வழங்க எதிர்ப்புத் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் அர்னாப் பேசிய வார்த்தைகள் இரு சமூகத்துக்கு இடையே மோதலை உருவாக்கும் வார்த்தைகள். இதை விசாரிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

சத்தீஸ்கர் மாநிலம் சார்பில் மூத்த வழக்கறிஞர் விவேக் ஆஜராகி வாதிடுகையில், “ஒளிபரப்பு உரிமைையைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இதுபோன்ற கருத்துகளைப் பேச கோஸ்வாமிக்குத் தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் சந்தரசூட், எம்ஆர் ஷா உத்தரவு பிறப்பித்தனர். அதில், “ ஊடகங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இருக்ககூடாது. அதற்குக் கட்டுப்பாடு விதிக்கவும் எனக்குத் தயக்கம் இருக்கிறது. இந்த வழக்கில் கோஸ்வாமி மீது வழக்கப்பட்ட அனைத்துப் புகார்களையும் ஒருங்கிணைத்து விசாரிக்க வேண்டும். கோஸ்வாமிக்கு எதிராக 3 வாரங்களுக்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.

அதேசமயம் அவர் விசாரணைக்கும் ஒத்துழைக்க வேண்டும். முன் ஜாமீனும் கோஸ்வாமி பெற்றுக் கொள்ளலாம். பல்வேறு மாநிலங்களில் கோஸ்வாமிக்கு எதிராக வழங்கப்பட்ட புகார்களை விசாரிக்கவும் தடை விதித்து, நாக்பூரில் தொடரப்பட்ட அவதூறு வழக்கையும் மும்பைக்கு மாற்றுகிறோம். கோஸ்வாமி, அவரின் மனைவி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மும்பையில் தொடரப்பட்ட வழக்கோடு அனைத்தையும் இணைத்து விசாரிக்க வேண்டும்.

மேலும், பால்கர் சம்பவம் தொடர்பாக கோஸ்வாமி மீது புதிதாக எந்த எப்ஐஆர் பதிவு செய்து அதன் அடிப்படையில் விசாரிக்கக்கூடாது. இந்த விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிரா ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், தெலங்கானா அரசுகளும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்''.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT