இந்தியாவின் மிகப் பெரிய விமான நிறுவனமான இண்டிகோ தனது பெரும்பான்மையான ஊழியர்களுக்கு எந்தவித சம்பள வெட்டுமின்றி ஏப்ரல் மாதத்திற்கான முழு ஊதியமும் வழங்க உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான லாக் டவுன் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் மிகவும் சிக்கலை சந்தித்து வருகின்றன. இதனால் ஊழியர்களுக்கு முழுமையாக ஊதியத்தை வழங்க இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இந்நிலைலையில் இண்டிகோ விமானம் தனது நிறுவனத்தைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் எந்தவித பிடித்தமுமில்லாமல் முழுமையான சம்பளத்தை வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்பு, இண்டிகோ தனது ஊழியர்களிடம் 10 முதல் 20 சதவீதம் சம்பள வெட்டுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது. ஆனால் தற்போது அந்த முடிவிலிருந்து இண்டிகோ மாறியுள்ளது.
இதுகுறித்து இண்டிகோவின் தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜோய் தத்தா தனது ஊழியர்களுக்கு வியாழக்கிழமை அனுப்பியுள்ள மின்னஞ்சலில் கூறியுள்ளதாவது:
ஏப்ரல் மாதத்தில் முன்னர் அறிவிக்கப்பட்ட ஊதியக் குறைப்பை நாங்கள் நடைமுறைப்படுத்த விரும்பினோம். ஆனால் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், உங்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்களும் மூத்த துணைத் தலைவரும் இந்த மாதத்தில் தங்களின் சம்பள வெட்டுக்களை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளனர்.
மற்ற அனைவருக்கும், உங்கள் ஏப்ரல் சம்பளம் ஊதியக் குறைப்பு இல்லாமல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
நம் நிறுவனத்திற்கான வருவாய் ஈட்டும் ஒரு ஆதாரம் இப்போதும் சரக்கு நடவடிக்கைகளில் மூலம் நமக்கு கிடைத்து வருகிறது, மேலும் நம் நிறுவனத்திற்காக அனைத்து சரக்கு நடவடிக்கைப் பணிகளையும் மேற்கொள்ள அயராது உழைக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்.
அரசாங்கத்தின் ஆலோசனைகள் மற்றும் சமூக இடைவெளி மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் குறித்த சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளில் அறிவுரைகளில் நமது ஊழியர்கள் கவனம் செலுத்தவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு இண்டிகோவின் தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜோய் தத்தா ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.