கேரள மாநிலத்தில் முன்னாள் பத்திரி கையாளர் ஒருவர், ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்திருப்பதாக, உளவு அமைப்புகள் தகவல் தெரிவித்துள்ளன.
அடையாளம் வெளியிடப்படாத அந்தப் பத்திரிகையாளர், பாலக் காட்டில் உள்ள நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வந்தார். சிரியாவுக்குச் சென்று தீவிரவாத அமைப்பில் இணைவதற்கு முன்பு, கடந்த ஆண்டு அவர் கத்தார் நாட்டுக்கு மாற்றலாகிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
லண்டன் போலீஸார் அங்கிருக் கும் சில ஐஎஸ் அனுதாபிகளைக் கைது செய்தபோது, இந்தப் பத்திரிகையாளர் சிரியாவில் இருப்பது தெரிய வந்தது. சமூக வலைதளங்கள் மூலமாக அவருக்கு ஐஎஸ் அமைப்பினருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
அவருக்கு அந்த அமைப்பில் சேர ஆர்வம் இருந்தது. இதை அறிந்த அவரின் உறவினர்கள், அவரை அந்த அமைப்பில் இணைவதில் இருந்து தடுத்து நிறுத்த முயன்றனர். ஒரு கட்டத்தில் தன் குடும்பத்தினரிடமிருந்து அழுத்தம் அதிகரிக்க, அவர் கடந்த ஆண்டு கத்தாருக்கு மாற்றலாகிச் சென்றார். பின்னர் அங்கிருந்து சிரியாவுக்குச் சென்றுள்ளார்.
சில காலமாகவே அவரின் சமூக வலைதளப் பக்கத்தை உளவுத் துறையின் கண்காணித்து வந்தனர். அவரைப் பிடிப்பதற்கு முன்பு, அவர் கத்தாருக்குச் சென்றுவிட்டார். அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீது கண்காணிப்பு தொடர்ந்தாலும், மத்தியக் கிழக்கு நாடுகளில் உள்ள இந்தியர்களை மூளைச் சலவை செய்து அவர்களை ஐஎஸ் அமைப்பில் இணைக்க அவர் முயற்சிக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அந்தப் பத்திரிகையாளர் குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத அவரின் நண்பர் கூறும்போது, "அவர் சமூகவியல் பட்டதாரி. ஆங்கிலப் புலமை உள்ளவர். கத்தாரில் இருக்கும்போது அரபு மொழியும் கற்றுக்கொண்டார். அமைதியான சுபாவம் கொண்ட அவர், சமீபகாலமாக சர்வதேச அளவிலான முஸ்லிம் அரசியல் குறித்து ஈடுபாடு கொண்டிருந்தார். இணையத்தில் அதிக நேரம் செலவிடும் அவர், கணினி சார்ந்த புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருந்தார்" என்றார்.
சமூக வலைதளங்கள் மூலமாக அவருக்கு ஐஎஸ் அமைப்பினருடன் நெருக்கம் ஏற்பட்டு அந்த அமைப்பில் சேர ஆர்வம் உருவானது.