பிரதிநிதித்துவப் படம் 
இந்தியா

உ.பி.யில்  வீட்டுக்குச் செல்ல முடியா மருத்துவர்களுக்கு வழங்கிய தங்குமிடங்களின் மோசமான, அருவருப்பான நிலை- வீடியோ வெளியிட்ட மருத்துவர்கள்

செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேச மாநிலம் ரே பரேலி மாவட்டத்தில் கோவிட்-19 காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவிப் பணியாளர்கள் ஆகியோருக்கு அரசுப்பள்ளி ஒன்றில் அறைகள் தங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் தங்கள் வீட்டுக்கே செல்ல முடியாத நிலை, காரணம் கரோனா நோயாளிகளுடன் இருப்பதால் வீட்டிலிருப்பவர்களுக்கும் பரவிவிடும் என்ற அச்சமே.

இந்நிலையில் இவர்களுக்கு உ.பி.அரசு ஒதுக்கியிருக்கும் அரசுப் பள்ளிகள் வாழத் தகுதியற்ற இடமகா இருப்பதை வீடியோ பிடித்து மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஒரு புறம் கரோனா போராளிகள், கடவுளுக்குச் சமம், இவர்களை மதிக்காவிட்டால் என்று ஊருக்கு உபதேசம் செய்யும் உ.பி.அரசு கரோனா போராளிகளுக்கு வழங்கியிருக்கும் தங்குமிடங்களின் மோசமான கழிப்பறை, மோசமான, வீணாய்ப்போன உணவுகள் அவர்களின் வெறும் வாய்ஜோடனையை பறைசாற்றுவதாக உள்ளன என்று சமூக ஆர்வலர்கள் சாடியுள்ளனர். ஆனால் உ.பி.அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக உ.பி.அரசுக்கு மருத்துவர்கள் எழுத்து பூர்வமாக புகார் அனுப்பியுள்ளனர்.

இதில் ஒரு வீடியோ காலை 3 மணிக்கு எடுக்கப்பட்டது, அதில், “காலை 3 மணி மின்சாரம் இல்லை. ஒரே அறையில் 4 கட்டில்கள், இது 5 நட்சத்திர கிளாஸ் என்கிறார்கள் ஆனால் மின்விசிறி கூட ஒழுங்காக வேலை செய்யவில்லை. கழிப்பறைகளைப் பாருங்கள் பைப்கள் இல்லை, மிகவும் அசுத்தமாக உள்ளன, இந்தநிலையில்தான் நாங்கள் இருந்து வருகிறோம்.

2வது வீடியோவில் உணவின் லட்சணம் வெளியிடப்பட்டுள்ளது.

“மதிய உணவுக்கு அளிக்கப்படும் உணவைப் பாருங்கள், பாலித்தின் கவர்களில் அனைத்தும் ஒன்று கலந்து கட்டப்பட்டுள்ளது. பூரி சப்ஜி எல்லாம் ஒன்று கலந்து சாப்பிட முடியாமல் உள்ளது. இது கோவிட்-19 சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு வழங்கப்படும் உணவின் ஸ்திதி” என்று வீடியோவில் ஒருவர் பேசியுள்ளார்.

3வது வீடியோவில், “ஒவ்வொரு அறையிலும் 4 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கரோனா சமூக விலகல், தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது. கழிப்பறை பற்றி புகார் தெரிவித்தவுடன் மொபைல் டாய்லெட் அளித்தார்கள் ஆனால் மின்சாரம் இல்லை, 20 லிட்டர் தண்ணீர் கேன் கொடுத்து இதை அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்கின்றனர்” என்று மருத்துவர் ஒருவர் புகார் எழுப்பியுள்ளார்.

இந்தப் புகார்களை அடுத்து மாவட்ட நிர்வாகம் இவர்களை விருந்தினர் இல்லத்துக்கு மாற்றியுள்ளது, சமைக்கப்பட்ட உணவை சுடச்சுட வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரேபரேலி டாக்டர் ஒருவர் தனியார் தொலைக்காட்சியில் தெரிவிக்கும் போது, “இதுதான் நம் நாட்டின் சுகாதார அமைப்பு முறை என்றால் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் எங்களுக்கு நோய் தொற்றினால் அனைவருக்கும் அது பரவாதா?” என்று கேள்வி எழுப்புகிறார்..

எதையுமே புகார் எழுந்தவுடன் தான் மாற்றும் நிலை இருக்கிறதே தவிர முன் தயாரிப்பு திட்டமிடுதல் இல்லை என்கிறார் இன்னொரு மருத்துவர்

SCROLL FOR NEXT