டெல்லியில் பிசா டெலிவரி நபருக்கு கரோனா தொற்றிய விவகாரத்தால் தற்போது ஆன்லைன் உணவு நிறுவனங்கள் விற்பனைஇழப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளன.
இதில் அதிகம் பாதிக்கப்பட்டது சொற்ப வருவாயை ஈட்டிக் கொண்டிருந்த டெலிவரி ஊழியர்கள்தான்.
கடந்தவாரம் தெற்கு டெல்லியில் வீடுகளுக்கு சென்று பிசா டெலிவரி செய்த நபர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த நிறுவனத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிய 17 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களை தனியிடத்தில் வைத்து கண்காணித்து வருவதாக டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்திருந்தார்.
இதுமட்டுமின்றி அவர் பிசா வழங்கிய 73 வீடுகளையும் போலீஸார் தனிமைப்படுத்த உத்தரவிட்டனர்.
சில தினங்களுக்கு முன், கோவிட் 19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட பிசா டெலிவரி செய்த நபரைத் தவிர அவர் தொடர்புகொண்ட 73 வீடுகளில் உள்ள யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்று பரிசோதனைகளில் தெரியவந்தது. எனினும் தற்போது எந்தவகையிலும் கரோனா வைரஸ் பரவுவதாக மக்கள் அஞ்சுவதால் இப்போது யாரும் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்வதைநிறுத்தியுள்ளதாக டெலிவரி நிர்வாகிகள் ஏஎன்ஐயிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆன்லைன் உணவு விநியோக டெலிவரி ஊழியர் ஒருவர் ஏஎன்ஐயிடம் கூறுகையில், ''ஆன்லைன் உணவுக்கான தேவை வெகுவாகக் குறைந்துள்ளது. மக்கள் ஆர்டர் செய்வதை நிறுத்திக்கொண்டனர். இந்தத் தொழிலில் கொஞ்சம் பணம் சம்பாதிக்க நாங்கள் ஒரு நாளைக்கு 15-20 மணி நேரம் உழைக்க வேண்டும். இருப்பினும், நாங்கள் எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்கிறோம், ஆனால் ஒரு டெலிவரி ஊழியருக்கு கோவிட் 19 உறுதியானபின் அதிலிருந்து இப்போது யாரும் வெளியில் இருந்து உணவை சாப்பிட தயாராக இல்லை.'' என்றார்.
மற்றொரு டெலிவரி ஊழியர் ஆகாஷ் குப்தா கூறுகையில், ''நாங்கள் பிரதான கேட் வாயில்களில் மட்டுமே உணவை வழங்குகிறோம். எங்கள் பாதுகாப்புக்காக கையுறைகள், சுத்திகரிப்பான்கள் உள்ளன. எங்கள் உடல் வெப்பநிலையும் நிறுவனத்தால் தினமும் சரிபார்க்கப்படுகிறது. ஆனால், அதன்பிறகு இதுவரை மக்கள் உணவை ஆர்டர் செய்யவில்லை, '' என்றார்.