கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பாராட்டி பிரதமர் மோடிக்கு உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும், சமூக பணிகள் மேற்கொண்டு வருபவருமான பில்கேட்ஸ் கடிதம் எழுதியுள்ளார்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் மே 3-ம் தேதி வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
‘‘கரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர நீங்களும், உங்களது அரசும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறேன். ஒருபுறம் பொதுசுகாதாரத்தை பேணி கரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பொருளாதார ரீதியாக சமூகத்தில் பின்தங்கியுள்ளவர்களின் நலனில் அக்கறையுடன் செயல்படும் உங்கள் நோக்கம் மிகவும் சிறப்பானது.
ஊரடங்கை அமல்படுத்தியது, பரிசோதனையை விரிவுபடுத்தியது, தனிமைப்படுத்துவதற்காக ஹாட்ஸ் பாட் பகுதிகளை கண்டறிந்தது, தனிமைப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாராட்டுக்கு உரியவை.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆரோக்கிய சேது செயலி உள்பட தற்போதைய தொழில்நுட்பங்களை இந்தியா சிறப்பாக செயல்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது.’’
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.