கோடைக் காலம் என்றால் உத்தரப்பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் பாலைவனம் போல் வெயில் சுட்டெரிக்கும். இதில் கரோனா வைரஸ் லாக் டவுன் சிக்கல்களும் ஒன்று சேர கையிலிருந்த பணம் செலவழிந்த நிலையில் 4 கல்லூரி மாணவர்கள் சுமார் 570 கிமீ பயணம் செய்து பரேலியிலிருந்து வாரணாசி நோக்கி கால்நடையாகப் புறப்பட்டனர்.
பரேலியில் உள்ள ரோஹில்கண்ட் பல்கலையைச் சேர்ந்த மாணவர்கள் இவர்கள். மேற்கு உ.பி. பரேலியிலிருந்து லக்னோவுக்கு 250 கிமீ தூரம் அங்கிருந்து வாரணாசியில் தங்கள் சொந்த இடத்துக்கான தூரம் 320 கிமீ.
“முதற்கட்ட லாக்-டவுனை சமாளிக்க வீட்டிலிருந்து பணம் அனுப்பினார்கள்,, நாங்கள் பெய்ட் கெஸ்ட்டாக இருந்தோம். பணம் தீரும் நிலை ஏற்பட்டது. என்ன செய்வது வெயிலாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஊர்நோக்கி புறபட்டோம்” என்று தனியா ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.
இந்த வாரத்தில்தான் தெலங்கானாவிலிருந்து சத்தீஸ்கர் பிஜப்பூர் மாவட்டம் நோக்கி நடந்து வந்த 12 வயது சிறுமி தன் வீட்டுக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கும் நிலையில் களைப்படைந்து நீர் வற்றி இறந்தே போன துயரச்சம்பவம் நடந்தது.
அதே போல் கடந்த வாரம் டெல்லியிலிருந்து மத்தியப் பிரதேசம் நோக்கி 200 கிமீ நடந்த 38 வயது நபர் இறந்தே போனார்.
இந்நிலையில் நடந்தே ஊர் வர முடிவெடுத்த இன்னொரு மாணவர், “நான் தினக்கூலி வேலை செய்யும் குடும்பத்திலிருந்து வந்தவன். ரொம்பவும் கஷ்டப்பட்டுத்தான் படிக்க வைக்கிறார்கள் இதில் ஊரில் உட்கார்ந்து கொண்டு நாங்கள் பணம் கேட்டுக் கொண்டிருந்தால் அவர்களுக்கு ஒன்றுமில்லாமல் போய் விடும்” என்றார்.
ஒரு புறம் பிரதமர் கேர்ஸுக்கு அனைவரும் நன்கொடை அளிக்கின்றனர், தனியார்கள் உதவி புரிவதாக செய்திகள் வருகின்றன, எத்தனையோ கோடி பேர்களுக்கு ரேஷன் பொருள் அளித்ததாக உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார், ஆனாலும் பட்டினிச்சாவுகளும், புலம்பெயர் தொழிலாளர்கள் வேதனையும் தீர்ந்தபாடில்லை என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.