இந்தியா

விவசாயிகள் தற்கொலையை தடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

ஐஏஎன்எஸ்

நாட்டில் விவசாயப் பிரச்சினை காரணமாக விவசாயி தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கூறியுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளி லும் கடன் தொல்லை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை குறிப்பிட்டு, பஞ்சாபை சேர்ந்த யூத் கமல் என்ற தன்னார்வ அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தது. விவசாயத் துறையில் வேளாண் நிபுணர் எம்.எஸ்.சுவாமிநாதனின் பரிந்துரைகளை அமல்படுத்த உத்தரவிடவேண்டும் என்று அந்த அமைப்பு கோரி யிருந்தது. இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் மதன் பி.லோக்கூர், யு.யு.லலித் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், “நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் பெருமளவு குறைந்துள்ளன” என்றார்.

தடுக்கப்பட வேண்டும்

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “தற்கொலைகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது போதுமானது அல்ல. நாட்டில் விவசாயப் பிரச்சினை காரணமாக விவசாயி தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். விவசாயிகளுக்கான 2007-ம் ஆண்டு தேசியக் கொள்கையில் குறைபாடுகள் உள்ளன.

இதை மீண்டும் ஆய்வு செய்வது அவசியம். இந்த மறுஆய்வு குறித்து மத்திய அரசு தனது பதிலை 6 வாரங்களுக்குள் தெரிவிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

மேலும், “விவசாயிகள் பிரச் சினை தொடர்பாக எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான குழு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் கூடி விவாதிப்பது போது மானதல்ல. இக்குழுவின் கூட்டம் அடிக்கடி நடைபெற வேண்டும்” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

பல்வேறு காரணங்கள்

இதனிடையே இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “விவசாயி தற்கொலை செய்துகொள்வதற்கு வேளாண் பிரச்சினை மட்டுமே காரணம் அல்ல. குடும்பப் பிரச்சினை, தீராத நோய், போதைப் பொருள் பயன்பாடு, சொத்துப் பிரச்சினை, காதல் விவகாரம், குழந்தை யின்மை, திருமண வாழ்க்கையில் பிரச்சினை அல்லது விவாகரத்து, வரதட்சிணை பிரச்சினை, சமூக அந்தஸ்துக்கு பாதிப்பு என பல்வேறு காரணங்களும் உள்ளன” என்று கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT