கோப்புப்படம் 
இந்தியா

மே 3 வரை லாக் டவுனில் கூடுதலாகக் கடைகள் திறக்க உள்துறை அமைச்சகம் அனுமதி: என்னென்ன கடைகள் செயல்படலாம்? 

பிடிஐ

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 2-ம் கட்டமாகக் கொண்டு வரப்பட்டுள்ள லாக் டவுனில் மேலும் என்னென்ன கடைகளைத் திறக்கலாம் என்பது குறித்த வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார். முதல்கட்ட லாக் டவுன் காலத்தில் வேளாண் செயல்பாடு, தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்கள், சிறுதொழில்கள் மூடப்பட்டதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருமானத்தை இழந்தனர்.

அதன்பின் 2-வது கட்டமாக லாக் டவுன் கடந்த 15-ம் தேதி முதல் வரும் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே 20-ம் தேதிக்குப் பின் கரோனா பாதிப்பு குறைந்த இடங்களில் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, பொருளாதாரச் செயல்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் என்றும் மோடி தெரிவித்தார்.

அதன்படி மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டு வருகிறது. சரக்கு லாரிப் போக்குவரத்து, வேளாண் பணிகள், மீன்பிடித் தொழில், சுயதொழில்கள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று இரவு வெளியிட்ட அறிவிப்பில் கூடுதலாக என்னென்ன கடைகள் திறக்கலாம் எனப் பட்டியலிட்டுள்ளது.

அதன் விவரம் :

  • மாணவர்களுக்குத் தேவையான பாடப் புத்தகக் கடைகளைத் திறந்து விற்பனையை நடத்த அனுமதி.
  • மின்விசிறிகள் உள்ளிட்ட மின்னணுப் பொருட்களை விற்கும் கடைகளைத் திறக்க அனுமதி.
  • வீடுகளில், காப்பகங்களில் முதியோர் இருந்தால் அவர்கள் உதவிக்காக பணிக்குச் செல்வோர் செல்லலாம்.
  • மொபைல் போன் ரீசார்ஜ் கடைகள் திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • லாக் டவுன் காலத்தில் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் பிரெட் (ரொட்டி) தயாரிக்கும் தொழிற்சாலை, பேக்கரிகள், மாவு அரைக்கும் மில்கள் போன்றவற்றைச் செயல்படுத்தலாம்.
  • பால் பதப்படுத்தும் தொழிற்சாலைகள், பருப்பு அரைக்கும் மில்கள், உணவு தானியங்கள் அரைக்கும் மில், ஏற்றுமதி, இறக்குமதிக்குத் தேவையான பொருட்களை பேக்கிங் செய்யும் தொழிற்சாலைகள் இயங்கலாம்.
  • வேளாண் தொழில்கள், தோட்டக்கலை தொடர்பான தொழில்கள், அதுசார்ந்த உற்பத்திப் பொருட்கள் தயாரிக்க அனுமதி.
  • வேளாண் பொருட்களை இரு மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலத்துக்குள்ளும் கொண்டுசெல்லும் போக்குவரத்துக்கு அனுமதி.
  • தேன் எடுத்தல் தொழில், வன அலுவலகம், காடு வளர்ப்புத் தொழில், அதுசார்ந்த தொழில்கள், மரம் வளர்ப்பு ஆகியவற்றுக்கும் அனுமதியளிக்கப்படுகிறது.
  • இந்தத் தொழில்கள் செய்யும்போதும் ஈடுபடும்போதும் கண்டிப்பாக அனைவரும் சமூக விலகலைக் கடைப்பிடிக்கவும், முகத்தில் முகக்கவசம் அணியும் கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT