இந்தியா

கரோனா பாதிப்பால் 2 திட்டங்களுக்கு முன்கூட்டியே நிதி வழங்கிய மத்திய அரசு - சிறப்பான செயல்பாட்டால் தமிழகத்துக்கு தொடர்ந்து அதிக நிதி

ஆர்.ஷபிமுன்னா

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 2 திட்டங்களுக்கான நிதியை மாநிலங்களுக்கு மத்திய அரசு முன்கூட்டியே வழங்கியுள்ளது. இந்த திட்டங்களில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு, தொடர்ந்து அதிகதொகையை பெற்று வருகிறது.

நாடு முழுவதிலும் அரசு, தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் சேவைகளுக்காகவும் மத்திய அரசு பல்வேறு அமைச்சகங்கள் சார்பில் நிதி வழங்குகிறது. இந்த வகையில், மத்திய மகளிர்மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் குழந்தைகள்பாதுகாப்பு திட்டம் (சிபிஎஸ்). தூய்மை நடவடிக்கை திட்டம் (எஸ்ஏபி) எனும் பெயரிலான 2 திட்டங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் 21 மாநிலங்களுக்கு 2020-21-ம் ஆண்டுக்கான முதற்கட்ட தொகையாக சிபிஎஸ்-க்கு ரூ.43.25 கோடியும் எஸ்ஏபி-க்கு 1 கோடியும் நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்துக்கு மிக அதிக அளவாக சிபிஎஸ்-க்கு ரூ.9.37 கோடியும், எஸ்ஏபி-க்கு ரூ.13.37 லட்சமும் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு தமிழகம் இவ்விரு திட்டங்களையும் தொடர்ந்து சிறப்பாக அமல்படுத்தி வருவதே காரணமாகும்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக வட்டாரத்தில் கூறும்போது, “இந்த நிதியை ஜூன் இறுதி வரை நாங்கள் வழங்குவது வழக்கம்.ஆனால் கரோனா பாதிப்பு காரணமாக தற்போது முன்கூட்டியே வழங்கியுள்ளோம்.

இரண்டு திட்டங்களையும் அமல்படுத்துவதுடன் முறையான கணக்குகளை வழங்குவதில் தமிழகமும் மணிப்பூரும் சிறந்து விளங்குகின்றன. பிரதமர் நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்தது முதல்தமிழகத்துக்கு இந்த திட்டங்களில்தொடர்ந்து அதிக நிதி ஒதுக்கப்படுகிறது” என்று தெரிவித்தனர்.

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்தபோது, இதுபோன்ற நிதிகளை அவரே நேரடியாக தலையிட்டு முயன்று வந்தார்.இதற்காக பிரதமர் அல்லது நிதியமைச்சருடன் போனில் பேசியும் அல்லது டெல்லி வரும்போது மனு அளித்தும் வலியுறுத்தி வந்தார். அவரது மறைவுக்கு பிறகு தமிழக அமைச்சர்கள் டெல்லிக்கு வருவதும், நிலுவைத்தொகை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக மத்திய அமைச்சர்களை சந்திப்பதும் அதிகமாகி உள்ளது. இதனால்பல்வேறு அமைச்சகங்களில் இருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய நிலுவை தொகை வசூலாவது அதிகம் என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT