டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அமித் துவிவேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் வேகமாக அதிகரித்துவருகிறது. இந்தப் பேரிடரை எதிர்கொள்வதற்கு போதுமான கட்டமைப்புகள் நமது சுகாதாரத் துறையிடம் இல்லை.
எனவே, அனைத்து தனியார் மருத்துவமனைகளை தேசியமயமாக்க வேண்டும். அதேபோல,கரோனா வைரஸ் பரிசோதனைகள் மற்றும் நோயாளிகளுக்கான சிகிச்சைகளை இலவசமாக வழங்கமத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் என்.வி. ரமணா, எஸ்.கே. கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாடு முழுவதும்உள்ள அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சைதான் அளிக்கப்பட்டு வருகிறது. அப்படியிருக்கையில், விளம்பரத்துக்காக இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்வதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், யாருக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யும் அதிகாரம் அரசிடம்தான் உள்ளது. நீதிமன்றத்துக்கு கிடையாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.