கரோனா வைரஸ் ஒழிப்பில் முக்கியமாகத் தேவைப்படும் ஆல்ஹலால் கலந்த கை சுத்திகரிப்பு திரவம் (சானிடைசர்) தயாரிக்க அரிசியை ஏற்றுமதி செய்யும் மத்திய அரசின் முடிவை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.
கரோனா வைரஸ் ஒழிப்பில் முக்கியமானது கை சுத்தமாகும். அதற்கு சானிடைசர் அதிகமாகத் தேவைப்படுகிறது. அந்தத் தேவையை நிறைவு செய்யும் பொருட்டு அரிசியின் மூலம் சானிடைசரைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டது. அதன்பின் அரிசியின் மூலம் எத்தனால் தயாரித்தால் அதை சானிடைசருக்கும், பெட்ரோலில் கலக்கவும் பயன்படுத்த முடியும்.
இதற்காக இந்திய உணவுக் கழகத்திலிருந்து அபரிமிதமாக, உபரியாக இருக்கும் அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து எத்தனால் பெற முடிவு செய்யப்பட்டது. இதற்கான முடிவு தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்புக் குழுவில் நேற்று எடுக்கப்பட்டது.
அதேசமயம், பல்வேறு மாநிலங்களின் எல்லைகளில் புலம் பெயர் தொழிலாளர்கள் உணவு இன்றி, அரிசியின்றி மிகவும் துன்பப்படுகிறார்கள். நாட்டில் லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்கள், கீழ்நடுத்தரக் குடும்பத்தினர் அரிசி கிடைக்காமல் மிகுந்த சிரமப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தத் தகவல் அறிந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் மத்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில், “ஏழை மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சானிடைசர் தயாரிக்க அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்கிறது.
இந்தியாவில் உள்ள ஏழைகள் எப்போது விழிப்படைவார்கள்? நீங்கள் பசியில் செத்து மடிகிறீர்கள். ஆனால், அவர்கள் பணக்காரர்கள் கைகளைக் கழுவுவதற்காக உங்களுக்காக வைத்திருக்கும் அரிசியை சானிடைசர் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், உபரி அரிசியைப் பயன்படுத்தி சானிடைசர் தயாரிக்க அரசு அனுமதித்துள்ளது குறித்த செய்தி வெளியானதையும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார்.