டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை அமைந்துள்ள வளாகத்தில் பணியாளர் குடியிருப்பில் வசிக்கும் ஒருவரின் உறவினருக்கு கரோனா உறுதியானதையடுத்து, 100 குடும்பங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரபூர்வமாக ஏதும் தெரிவிக்கவில்லை என்றபோதிலும், அங்கிருந்து நம்பத்தகுந்த வட்டாரங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.
இதன்படி அந்தத் தகவலில், “குடியரசுத் தலைவர் மாளிகையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளரின் தாய் கடந்த சிலநாட்களுக்கு முன் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கிற்கு அந்த ஊழியர் சென்றுவந்தார்.
இந்நிலையில் தூய்மைப் பணியாளரின் தாய்க்கு கரோனா இருந்தது நேற்று முன்தினம் உறுதி செய்யப்படது. இதையடுத்து இறுதிச்சடங்கிற்கு சென்றுவந்த ஊழியரை தனிமைப்படுத்த அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். மேலும், அந்த ஊழியர், அவருடைய குடும்பத்தினர், அந்த வளாகத்தில் உள்ள 100 குடும்பத்தினரையும் தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கரோனாவில் உயிரிழந்த அந்த ஊழியரின் உறவினருக்கும், குடியரசுத் தலைவர் மாளிகைக்கும் எந்தவிதமான நேரடித் தொடர்பும் இல்லை. கரோனா பாதிக்கப்பட்ட அந்த ஊழியர் பிர்லா மந்திர் பகுதியில் உள்ள தனிமை முகாமுக்கு அனுப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் வசிக்கும் 100 குடும்பத்தினரும் தீவிரமான சமூக விலகலைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” எனத் தெரியவந்துள்ளது.