கேதார்நாத் கோயிலின் தலைமை அர்ச்சகர் மேலும் 5 அர்ச்சகர்களுடன் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் சேர்ந்த மற்ற ஐந்து பேரும் தனித்தனியாக தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தீவிரம் காட்டிவரும் நிலையில் வடமாநிலங்களில் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்களைப் பொறுத்தவரை தாக்கம் சற்று குறைவாகவே காணப்படுகிறது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளில் ஒவ்வொரு மாநிலமும் கடுமையாகச் செயல்பட்டு வருகின்றன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இதுவரை 44 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கோவிட்-19 பரவாமல் இருக்க கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கேதார்நாத் கோயிலைச் சேர்ந்த தலைமை அர்ச்சகர் பீமா சங்கர் உள்ளிட்ட 5 பேரும் உத்தரகாண்டிலிருந்து மகாராஷ்டிராவில் உள்ள புராதன நகரமான நந்தேடுக்குச் சென்றனர். ஆனால், அங்கிருந்து அவர்கள் மீண்டும் கேதார்நாத் திரும்ப அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது.
இதுகுறித்து ருத்ரபிரயாக் மாவட்ட ஆட்சியர் மங்கேஷ் கில்டியால் கூறியதாவது:
''கேதார்நாத் கோயிலின் தலைமை அர்ச்சகர் பூசாரி பீமாசங்கருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்ட பின்னர், மகாராஷ்டிராவில் உள்ள நந்தேடில் இருந்து ருத்ரபிரயாகையில் உள்ள உக்கிமடத்துக்கு வந்து சேர்ந்தார்.
வேறு மாநிலத்திலிருந்து திரும்பி வருபவர்களை 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற கரோனா வைரஸ் நெறிமுறையைப் பின்பற்றி அர்ச்சகர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் சென்றிருந்த மற்ற அர்ச்சகர்கள் 5 பேரும் வெவ்வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்படும் காலம் முடிந்த பின் தலைமை அர்ச்சகர் மீண்டும் கேதார்நாத் கோயிலுக்கு வருவாரா இல்லையா என்பதை அரசாங்கம் முடிவு செய்யும். அவர் அனுமதி பெற்றாலும், அவர் வைரஸ் பரவலைத் தடுக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் பணியாற்றும் நிலை ஏற்படும். கோயில் மீண்டும் திறக்கப்பட்டவுடன் அவர் சமூக இடைவெளியைப் பராமரிக்க வேண்டும். அவருக்கு உடல்நலப் பரிசோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும்''.
இவ்வாறு மங்கேஷ் கில்டியால் தெரிவித்தார்.