முகாம்களில் தங்கியுள்ள புலம்பெயர்ந்தோருக்கு உணவு வழங்கப்படும் காட்சி. 
இந்தியா

முகாம் அருகிலேயே வேலை: புலம்பெயர் தொழிலாளர் 14 லட்சம் பேருக்காக மத்திய அரசு புதிய திட்டம்

ஐஏஎன்எஸ்

லாக் டவுன் நீட்டிப்பினால் சிக்கித் தவித்துவரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தற்காலிக நிவாரணமாக அவர்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு அருகிலேயே வேலை வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக லாக் டவுனை பிரதமர் மோடி அறிவித்தார். சமூக இடைவெளி ஒன்றுதான் கரோனாவை விரட்ட ஒரே வழி என்று தெரிவித்த பிரதமர், லாக் டவுனை அவசியம் கடைப்பிடியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

லாக் டவுனுக்குப் பின்னர் புலம்பெயர் தொழிலாளர்கள் வாழ்க்கை மோசமானது. சொந்த மாநிலங்களை நோக்கி லட்சக்கணக்கான மக்கள் பேருந்திலும் பிரத்யேக வாகனங்களிலும் சென்றனர். பலர் நடைப்பயணமாகவும் ஊர்போய்ச் சேர்ந்தனர். போக்குவரத்து திடீரென்று தடை செய்ப்பட்ட நிலையில் இதில் எதிலும் செல்ல இயலாதவர்கள் வேலைக்கு வந்த இடங்களை விட்டு வெளியேற முடியாத நிலையில் லாக் டவுனில் சிக்கிக்கொண்டனர். லாக் டவுன் மே 3 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில் அவர்கள் நிலை மேலும் பரிதாபத்திற்குள்ளானது.

முதல் கட்ட லாக் டவுன் அறிவிக்கப்பட்ட பின்னர் மார்ச் 29 அன்று வெளியிடப்பட்ட எஸ்ஓபியில் (Home Ministry Standard Operating Procedure), கரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில், 14.3 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் மக்கள் சுமார் 37,978 நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லாக் டவுனில் சிக்கிக்கொண்டாலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அந்தந்த மாநில அரசுகளும் அவர்களது உணவிற்கும் தங்குமிடத்திற்கும் பிரச்சினை இல்லாமல் பார்த்துக்கொண்டது.

இதைக்கூட மிகவும் சிரமத்துடனேயே புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொண்டனர். காரணம் வேலையில்லை. உறவினர்களோடு வாழ முடியாத சூழல் அவர்களை மன அழுத்தத்திற்கு தள்ளியதாகக்கூறப்படுகிறது. முக்கியமாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மேலும் முக்கியமானவையாக இருக்கின்றன.

இந்நிலையில் முகாம்களிலேயே முடங்கிக்கிடக்கும் தொழிலாளர்களுக்கு வேலை அளிக்க மத்திய அரசு முன்வந்துள்ளது. அதன்படி சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தற்காலிக நிவாரணமாக தங்குமிடம், காப்பக இல்லங்களில் இருந்து உற்பத்தி தொழிற்சாலை இடங்கள் மற்றும் பண்ணைகள் போன்ற பணியிடங்களுக்கு நாளை முதல் செல்ல அனுமதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி 21 நாள் நாடு தழுவிய லாக் டவுனை மே 3-ம் தேதி வரை மேலும் 19 நாட்களுக்கு நீட்டித்த பின்னர் உள்துறை அமைச்சகத்தால் சில வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.

ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்களின்படி, தொழில்கள் மற்றும் பிற பிரிவுகளில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் ஈடுபாட்டைப் பொறுத்து அனைத்துக் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே கூடுதல் புதிய நடவடிக்கைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை நாளை, திங்கள் (ஏப்ரல் 20) முதல் செயல்படுத்தப்பட உள்ளன.

அதன்படி மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள புதிய உள்துறை அமைச்சக தரநிலை இயக்க நடைமுறையில் (Home Ministry Standard Operating Procedure) கூறப்பட்டுள்ளதாவது:

''சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தற்காலிக நிவாரணமாக தங்குமிடம், காப்பக இல்லங்களில் இருந்து உற்பத்தி தொழிற்சாலை இடங்கள் மற்றும் பண்ணைகள் போன்ற பணியிடங்களுக்கு நாளை முதல் செல்ல அனுமதித்து உத்தரவிடப்படுகிறது. அதன்படி அவர்கள் தற்போது அமைந்துள்ள இடத்திலிருந்து மாநிலத்திற்கு அல்லது யூனியன் பிரதேசத்திற்கு உள்ளேதான் பணியாற்ற வேண்டும். வெளியே யாரும் செல்ல அனுமதிக்கப்படாது. கோவிட் -19 அல்லாத கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் இது பொருந்தும்.

தொழிற்துறை, உற்பத்தித் தொழிற்சாலை, கட்டுமானம், வேளாண் பண்ணைகள் மற்றும் எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம்) பணிகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் ஈடுபட இது உதவும்.

மாநிலங்களும் யூனியன் பிரதேச நிர்வாகங்களும் நிவாரண முகாம்களில் வசிக்கும் தொழிலாளர்கள் பல்வேறு வேலை இடங்களுக்குச் செல்வதற்கு முன்னர் அவர்கள் பணித்திறன் குறித்தும் பதிவு செய்யப்பட்ட விவரங்களைச் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒருவேளை, ஒரு குழுவாக உள்ள புலம்பெயர்ந்தோர் அவர்கள் பணிபுரியும் இடங்களுக்குத் திரும்ப விரும்பினால், அவர்கள் தற்போது அமைந்துள்ள மாநிலத்திற்குள், அவர்கள் பரிசோதனை செய்யப்பட்டு, அறிகுறியற்றவர்கள் அந்தந்தப் பணியிடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

அவ்வாறு அவர்கள் செல்லும் போக்குவரத்தின்போது சமூக இடைவெளி விதிமுறைகள் பின்பற்றப்படவும் வாகனங்கள் சுத்திகரிக்கப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்படும். உள்ளூர் அதிகாரிகள் தங்கள் (புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்) பயணத்தின்போது உணவு மற்றும் தண்ணீரை வழங்க வேண்டும்.

இதில், ஏப்ரல் 15 தேதியிட்ட ஒருங்கிணைந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதலின் கீழ் கரோனா வைரஸ் நிர்வாகத்திற்கான தேசிய வழிமுறைகள், கண்டிப்பாக பின்பற்றப்படும்''.

இவ்வாறு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT