காவல்துறையினருக்கு கூல்டிரிங்ஸ் வழங்கிய பெண்மணிக்கு சல்யூட் அடித்து ஆந்திர டிஜிபி நன்றி தெரிவித்தார்.
இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருப்பதால், பொதுமக்கள் அனைவருமே அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வருகிறார்கள். அதுவும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் மட்டுமே தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுடைய பணிக்கு பிரதமர் மோடி, முதல்வர்கள், திரையுலகப் பிரபலங்கள் என அனைவருமே பாராட்டி வருகிறார்கள்.
இதனிடையே, கடந்த சில நாட்களாகவே ஆந்திராவில் உள்ள காவல்துறையினருக்குப் பெண்மணி ஒருவர் பெரிய கூல்டிரிங்ஸ் கொடுக்கும் வீடியோ ஒன்று பெரும் வைரலானது. அந்த வீடியோவிலேயே காவல்துறையினர் விசாரிக்கும்போது, எனது வருமானம் 3000 ரூபாய்தான். ஆனால், எங்களைக் கரோனாவிடமிருந்து காப்பாற்றும் உங்களைப் போன்றவர்களையும் பாதுகாக்க வேண்டும் அல்லவா என்று பேசியிருந்தார்.
இந்த வீடியோ பதிவுக்கு அரசியல்வாதிகள், பிரபலங்கள் பலரும் பெரிய மனசு என்று பாராட்டியிருஎதனர்,
தற்போது அந்தப் பெண்மணியின் பெயர் லோகமணி என்பது தெரியவந்துள்ளது. அவரை ஆந்திர டிஜிபி கவுதம் ஸ்வாங் வீடியோ கால் மூலமாக அழைத்துப் பேசி பாராட்டி சல்யூட் அடித்துள்ளார். இந்த வீடியோ பதிவு ஆந்திர காவல்துறையினரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பதிவில் வெளியிடப்பட்டுள்ளது.
லோகமணியிடம் அந்த வீடியோவைப் பார்த்து மிகவும் நெகிழ்ந்துவிட்டேன் என்றும், உடனே இவர் யார் என்று கண்டுபிடிக்குமாறு சொன்னேன். உங்களை மாதிரியான மக்களைக் காப்பாற்றத்தான் இரவு பகலாக காவல்துறையினர் வேலை பார்த்துவருகிறோம். We Salute you Amma என்று ஆந்திர டிஜிபி கவுதம் ஸ்வாங் பேசியுள்ளார். அவர் சல்யூட் செய்தவுடன், வீடியோ கான்பரன்ஸ் அறையில் இருந்த இதர காவல்துறையினரும் கைதட்டி லோகமணிக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.