டெல்லியில் ஒரேநாளில் 186 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,893 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒரு வாரத்திற்குள் 42 ஆயிரம் பேரைப் பரிசோதிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் இன்று தெரிவித்தார்.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தொட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் அதிகமானோரைத் தாக்கிய நகரங்களில் டெல்லியும் ஒன்றாகும். இங்கு கடந்த ஒரு நாளில் 186 பேருக்குப் புதியதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஏஎன்ஐயிடம் கூறியதாவது:
''டெல்லியில் ஒரே நாளில் 186 பேருக்கு கோவிட் 19 நோய்த் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,893 ஆக அதிகரித்துள்ளது.
இனிவரும் வாரங்களில் வாரத்திற்கு 42,000 பேரை கரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்த உள்ளோம். எங்களுக்கு 42,000 விரைவான சோதனைக் கருவிகள் கிடைத்துள்ளன. எல்ஜிஜேபி மருத்துவமனையில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு வாரத்திற்குள் 42,000 சோதனைகளை முடிப்பதே எங்கள் இலக்கு.
இப்போது டெல்லியில், எந்த சமூகப் பரவலும் நடக்கவில்லை. ஆனால், மக்கள் சமூக மயமாக்கப்பட்டால் அச்சங்கள் உள்ளன. அறிகுறி இல்லாதவர்கள் மற்றவர்களைப் பாதிக்கலாம்''.
இவ்வாறு சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார்.