இந்தியா

டெல்லி மருத்துவர் தற்கொலையால் அதிர்ச்சி: தற்கொலைக் குறிப்பில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.மீது குற்றச்சாட்டு

பிடிஐ

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. வின் அராஜகம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாக டெல்லியில் 52 மருத்துவர் ஒருவர் தற்கொலை குறிப்பில் எழுதி வைத்தது பரபரப்பாகியுள்ளது.

டெல்லி நேப்சராய் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கண்டார். இவர் தனது தற்கொலைக் குறிப்பில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜார்வால் தன்னை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும் தனது வர்த்தக நலன்களைக் குறிவைத்து தன்னை மிரட்டியதாகவும் இதனால் தொல்லை தாங்க முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக 2 பக்க குறிப்பில் எழுதி வைத்துள்ளார். கபில் நாகர் என்பவர் மீதும் ராஜேந்திர சிங் புகார் எழுப்பியுள்ளார்.

மேலும் போலீஸார் கைப்பற்றிய டைரியிலும் அவர் தன்னை துன்புறுத்திய ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பற்றி எழுதியுள்ளதாக போலீஸார் குறிப்பிட்டனர். தற்கொலை செய்து கொண்டவர் வாட்டர் டேங்கர் சேவை தொழிலும் செய்து வந்தார். டெல்லி குடிநீர்வாரியத்துடன் இவருக்கு 2007ம் ஆண்டு முதலே ஒப்பந்தம் இருந்து வந்தது.

இந்நிலையில் ஒப்பந்தம் நீடிக்க வேண்டுமென்றால் பணம் கொடுக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ. மிரட்டியதாக அவர் தன் குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.

மேலும் பணம் கொடுக்க மறுத்ததால் டெல்லி குடிநீர் வாரிய சேவையிலிருந்து இவரது லாரிகளை மட்டும் எம்.எல்.ஏ. தன் செல்வாக்கினால் நிறுத்தியதாகத் தெரிகிறது.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ராஜேந்திர சிங் என்ற மருத்துவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜார்வால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT