ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ரூ.36 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தின ஊதிய தொழிலாளர்கள் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில் துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, ரூ.1.7 லட்சம் கோடி மதிப்பிலான நிவாரண திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து விவசாயிகளுக்கு மட்டும் சுமார் ரூ.36 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, பிரதமரின் கிஸான் சம்மன் நிதித் திட்டத்தின் கீழ், 8.4 கோடி விவசாயிகளுக்கு ரூ.16,927 கோடி அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல, வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 12 மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.2,424 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், விவசாயக் கடனாக ரூ.17,800 கோடி வழங்க வங்கிகள் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.