கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு காரணமாக தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள்பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் குறைந்த ஊழியர்கள் மூலம் நிறுவனங்களை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில் கர்நாடக துணை முதல்வர் அஷ்வத் நாராயணா நேற்று பெங்களூருவில் தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பயோ கான் நிறுவன தலைவர் கிரண் மஜும்தர் ஷா, நாஸ்காம் தலைவர் தேப்ஜானி கோஷ் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டம் 2 மணி நேரம் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு பின் துணைமுதல்வர் அஷ்வத் நாராயணா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் ஏப்ரல் 20-ம் தேதிக்கு பிறகு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இயங்க மத்திய அரசு சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி பெங்களூருவில் உள்ள தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களை மீண்டும் திறப்பது குறித்து அதன் உரிமையாளர்கள், செயல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் வரும் திங்கள்கிழமை (நாளை) முதல் 50 சதவீத ஊழியர்களுடன் தகவல் தொழில்நுட்ப, உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்த ஊரடங்கினால் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஊழியர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது. உண்மையிலே நிறுவனங்களுக்கு சமாளிக்க முடியாத அளவுக்கு பாதிப்பு இருந்தால் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஊதியத்தில் பிடித்தம், ஊதியத்தை அதிகரிப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வலியுறுத்தினேன். அதே போல ஊழியர்கள் அலுவலகத்துக்கு வந்து செல்வதற்காக கார் பாஸ், தனியார் கார் சேவை, முகக் கவசம், சானிடைசர், தனிநபர் இடைவெளி, பரிசோதனை மையம் ஆகியவற்றை முதல்வர் எடியூரப்பாவுடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக தெரிவித்தேன்'' என்றார்.