இந்தியா

கரோனா பாதிப்பு குறைகிறது; கர்நாடகாவில் 20-ம் தேதி முதல் கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்படும்: எடியூரப்பா

செய்திப்பிரிவு

கர்நாடாவில் கரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் நாளை மறுதினம் முதல் கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதையடுத்து ஊரடங்கு உத்தரவு நாடுமுழுவதும் மே- 3ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனால் கரோனாவை கட்டுப்படுத்த கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியதாவது:

அத்தியாவசிய பொருட்கள் போக்குவரத்துக்கு எந்த தடையும் கிடையாது. அதேபோல், கட்டுமானப்பொருட்களான கற்கள், சிமெண்ட், மணல், ஸ்டீல் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை.

கட்டுமானப் பணியாளர்கள், தாங்கள் பணிபுரியும் இடங்களிலேயே தங்க அனுமதிக்கப்படுவர். ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பிறகு இருசக்கர வாகனங்கள் செல்ல எந்தத் தடையும் இல்லை. மதுபானக்கடைகள், பொழுதுபோக்கு என எதற்கும் அனுமதியில்லை.

சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள தொழிற்சாலைகள் 30 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படும்.

கரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் தொடர்ந்து கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படும். அங்கிருந்து மக்கள் வெளியே வர அனுமதி இல்லை. அங்கு அத்தியாவசியப் பொருட்கள் வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து கொடுக்கப்படும். மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து அனுமதிக்கப்படாது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகள் பொருந்தாது.
இவ்வாறு அவர் கூறினார்.

          
SCROLL FOR NEXT