இந்தியாவில் காவல் துறையில் கரோனாவுக்கு முதல் பலியாக உதவி ஆணையர் அந்தஸ்து அதிகாரி ஒருவர் இன்று உயிரிழந்தார். அவரது மனைவி, பாதுகாப்பு அதிகாரிக்கும் நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய அளவில் கரோனா போரில் முன்னணி படைவரிசை வீரர்கள் என குறிப்பிடப்படும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினரை குறிப்பிடுவார்கள்.இவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புண்டு. இதில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் உயிரிழந்த நிலையில் இந்தியாவில் முதல் காவல் உயர் அதிகாரி கரோனா தொற்றால் பஞ்சாபில் உயிரிழந்துள்ளார்.
லூதியானா நகர் வடக்கு உதவி கமிஷனர் அனில் கோலி (52) கரோனா பாதிப்பால் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
அவரது மரணம் காவல்துறையினரை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு அஞ்சலி செலுத்தி அம்மாநில முதல்வர், டிஜிபி உள்ளிட்டோர் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர். டிஜிபி தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில்,
“ நமது சகோதரர் அனில் கோலி கரோனாவுக்கு எதிரான தனது போராட்டத்தில் தன்னுயிரை இழந்தது அறிந்து வருந்துகிறேன். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக காவல்துறையில் பொதுமக்களுக்காக சேவையாற்றி வந்தவர் அனில் கோலி. அவரது இழப்பு நமக்கெல்லாம் பேரிழப்பு”. என குறிப்பிட்டுள்ளார்.
அனில் கோலி, கரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட லூதியானாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவருக்கு கடந்த 12-ம் தேதி கரோனா பாதிப்பு உறுதியானது. அவருடைய மனைவி, உறவினர்கள், பாதுகாப்புக்கு இருந்த காவலர் ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கும் ஆய்வு நடத்தியதில் மனைவி, பாதுகாவலர், காவல் நிலைய அதிகாரி ஆகியோருக்கும் கரோனா தொற்று இருப்பதாக நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அனில் கோலி உடல் நலம் தேறி வந்த நிலையில் பஞ்சாப் அரசு அவருக்கு கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நோயாளியின் ரத்த பிளாஸ்மா மூலம் குணப்படுத்தும் சிகிச்சை அளிக்க முடிவு செய்திருந்தது.
இதற்காக மொஹாலி மாவட்ட நிர்வாகம் இன்று காலை, குணமடைந்த கரோனா நோயாளியை லூதியானா அனுப்பவிருந்தது. இந்நிலையில் அனைவரின் நம்பிக்கையையும் பொய்யாக்கிவிட்டு திடீரென உடல் நலம மோசமான நிலையில் அனில் கோலி மரணமடைந்தார்.
இந்தியாவில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் அதிகாரி ஒருவர் கரோனா நோய் தொற்றால் உயிரிழந்த முதல் அதிகாரி அனில் கோலி என்பது குறிப்பிடத்தக்கது. உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த அவர் தற்போது உதவி ஆணையராக பதவி வகித்து வந்தார்.