மாயாவதி 
இந்தியா

லாக் டவுனில் சிக்கிய மாணவர்களை பேருந்துகள் அனுப்பி அழைத்து வந்தது போன்ற அக்கறையை ஏழைத் தொழிலாளர்களிடத்திலும் காட்டுங்கள்: மாயாவதி

ஏஎன்ஐ

லாக் டவுனில் சிக்கிய மாணவர்களிடம் காட்டிய அக்கறையை ஏழை, புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடத்திலும் காட்ட வேண்டும் என்று யோகி அரசுக்கு மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லாக்டவுன் நீட்டிக்கப்பட்ட நிலையில் ராஜஸ்தானிலிருந்து 7000த்திற்கும் அதிகமான மாணவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் அனைவரும் ராஜஸ்தானிலிருந்து அவர்களின் சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்திற்கு பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா நகரத்தில் தங்கி பயிற்சி மையங்களில் படித்துவரும் அவர்கள் அனைவரும் பத்திரமாக இன்று உத்திரப் பிரதேசத்திற்கு திரும்பினர். இதற்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பாராட்டுத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இதேபோன்ற அக்கறையை ஏழைகளிடமும் காட்டுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து மாயாவதி இன்று ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

''பயிற்சி மையங்களில் படிக்கும் 7500 இளைஞர்களை திரும்ப அழைத்து வந்து பாதுகாப்பாக வீட்டிற்கு திருப்பி அனுப்புவதற்காக உ.பி. அரசு ராஜஸ்தானின் கோட்டாவுக்கு பல பேருந்துகளை அனுப்பியுள்ளது. இது வரவேற்கத்தக்கது. பகுஜன் சமாஜ் கட்சி அதைப் பாராட்டுகிறது.

ஆனால் வீடுகளில் இருந்து விலகி ஒரு நரக வாழ்க்கையை வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ள லட்சக்கணக்கான ஏழை புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பங்களுக்கும் இதேபோன்ற அக்கறை காட்ட வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் ''

இவ்வாறு மாயாவதி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் ராஜஸ்தானில் மொத்தம் 41 புதிய கோவிட் 19 வழக்குகள் பதிவாகியுள்ளன. மாநில சுகாதாரத் துறையின் கூற்றுப்படி இப்போது மாநிலத்தில் கரோனா பாதித்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1270 ஆக அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT