நாட்டில் கரோனா லாக்டவுன், வைரஸ் பாதிப்பினால் முடுக்கி விடப்பட்டுள்ள துப்புரவுப் பணிகள், மருத்துவச் சோதனைகள் ஆகியவற்றின் முக்கியத்துவமும் அறியாமல் கரோனா அச்சுறுத்தலிலும் துப்புரவு பணியிலும் மருத்துவப் பணியிலும் ஈடுபட்டுள்ளவர்களை தியாகிகளாகப் பார்க்காமல் அவர்களை அடித்து உதைப்பது, தாக்குவதும் ஒரு மோசமான கலாச்சாரமாக இந்தியாவில் பரவி வருவது வேதனையளிக்கக் கூடியதாகும்.
இன்னொரு இப்படிப்பட்ட சம்பவத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் தெருவை சுத்தம் செய்ய வந்த துப்புரவு பணியாளர்களை கும்பல் ஒன்று தடி மற்றும் பிற பொருட்களைக் கொண்டு தாக்கியது பரபரப்பானது.
இதில் துப்புரவுப் பணியாளர் ஒருவரை தாக்கியவர் கோடரியால் தாக்க அவருக்கு கையில் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையும் ஏற்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் சோதிப்பதற்காகச் சென்ற குழு ஒன்றுக்கு சில நாட்கள் முன் நடந்த அதே போன்ற வன்முறை துப்புரவு தொழிலாளர்களுக்கும் நடந்துள்ளது.
துப்புரவு பணியாளரைச் சுற்றி வளைத்து அவரை தள்ளியும் உதைத்தும் கண்டபடி ஏசியும் அவரது சட்டையைக் கிழித்தும் துன்புறுத்தியுள்ளனர், அவர் கெஞ்சும் காட்சிகள் கேமராவில் பதிவாகி பதற்றத்தை உருவாக்கியுள்ளன.
இதில் கோடாரியால் தாக்கிய ஆதில் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார், அவரது சகோதரர் தலைமறைவாகியுள்ளார். இவர் மீது கொலை முயற்சி எஸ்.சி. /எஸ்.டி வன்கொடுமைச் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே போல் கரோனா காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீது போபாலில் சிலர் கல் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர், இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர் இருவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாட்டை அடுத்து 1310 கரோனா தொற்றுகளுடன் மத்தியப் பிரதேசம் 4ம் இடத்தில் உள்ளது. 69 பேர் மரணமடைந்துள்ளனர்.