ஜார்க்கண்ட்டில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்ணுக்கு இரு நாட்களுக்குப் பிறகு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் குழந்தை வேறு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ராஞ்சி நிர்வாகம் தெரிவித்தது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதுவரை கோவிட் 19க்கு இந்தியாவில் 500 பேர் உயிரிழந்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை 29 பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டிருந்தது. பிரசவமான பெண் உள்ளிட்ட மூன்று பேருக்கு புதியதாக கண்டறிப்பட்டதை அடுத்து கரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 32 ஆக அதிகரித்தது.
பிரசவமான பெண்ணுக்கு கரோனா இருப்பது குறித்து ராஞ்சி நிர்வாகம் கூறியதாவது:
ராஞ்சியில் உள்ள சதர் மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு குழந்தையை பெற்றெடுத்த பெண்ணுக்கு பரிசோதனையில் கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக குழந்தை இடம் மாற்றப்பட்டது. அருகிலுள்ள ஆர்.எம்.எஸ் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தை தக்க பாதுகாப்போடும் சரியான கவனிப்பிலும் உள்ளது. அதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு ராஞ்சி நிர்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து ஆர்எம்ஐஎஸ் (ராஜேந்திரா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ், ராஞ்சி) மருத்துவர் காஷ்யப் கூறுகையில்,
''குழந்தை சரியான கவனிப்பில் உள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. குழந்தையை கவனித்துக்கொள்வது குறித்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் ஒரு விரிவான கலந்துரையாடலை நடத்தினர், அதன் பிறகு சரியான சானிடைஸனுக்குப் பிறகு குழந்தைக்கு தாயால் உணவளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் மாதிரிகள் இன்று கரோனா வைரஸ் பரிசோதனைக்கு அனுப்பப்படும்'' என்றார்.