மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மேற்கு கடற்படை பிரிவில் பணியாற்றும் 21 கடற்படை வீரர்கள் 21 பேருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
முதல் முறையாக கடற்படையினர் குறிப்பிடத்தகுந்த அளவு கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு முன் இந்திய ராணுவத்தினரில் 8 பேர் பாதிக்கப்பட்டு கிசிச்சையில் உள்ளனர்.
இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்ட அறிவிப்பில் “மும்பையில் மேற்கு கடலோரப் பிரிவில் பணியாற்றும் கடற்படை வீரர்களில் 21 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐஎன்எஸ் ஆங்கரே கப்பலில் இவர்கள் அனைவரும் பணியாற்றி வருகின்றனர். இவர்களைத் தவிர கப்பலில் இருக்கும் ஒருவருக்கும், நீர்மூழ்கி கப்பலில் இருக்கும் ஒருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை.
இந்த 21 வீரர்களுடன் தொடர்பில் இருந்தோர் அனைவரின் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் தனிமையில் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த 21 வீரர்கள் குடியிருந்த குடியிருப்பு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைத்து கடற்படை வீரர்களும் மும்பையில் உள்ள கடற்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 7-ம் தேதி ஒரு கடற்படை வீரர் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாஸிடிவ் உறுதி ெசய்யப்பட்டது, அதைத் தொடர்ந்து இப்போது 21 பேருக்கு கரோனா பரவியுள்ளது
இந்த சம்பவதத்தைத் தொடர்ந்து பாதுகாப்புத்துைற உயர் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் தீவிரமாக நிகழ்வுகளை கண்காணித்து வருகின்றனர். கடற்படைக்கு சொந்தமான அனைத்து இடங்களையும் தீவிரமாக கிருமி நாசினி தெளிப்புக்கு உட்படுத்தி, முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங் வெளியிட்ட வீடியோ செய்தியில் “ நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள், கண்காணி்ப்பு ரோந்து படகுகள் அனைத்தும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க வேண்டும். கரோனா வைரஸ் இதுவரை யாரும் பார்த்திராத ஒன்று, இதன் தாக்கம் இந்தியா உள்பட உலகளவில் அதிகமாக இருக்கிறது “ எனத் தெரிவித்திருந்தார்.