மருந்துகளை ஏற்றுமதி செய்கிறது இந்தியா; பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது பாகிஸ்தான் என்று இந்திய ராணுவத் தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவனே விமர்சனம் செய்துள்ளார்.
சமீபத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் துத்னியல் பகுதியில் பயங்கரவாத ஏவுதளங்களுக்கு எதிராக இந்திய ராணுவம் துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. ஏப்ரல் 1-ம் தேதி கெரான் செக்டரிலிருந்து ஊடுருவிய ஐந்து பயங்கரவாதிகளையும் கொன்றது.
மேலும், வெள்ளிக்கிழமை காலையிலிருந்து பல்வேறு முனைகளிலிருந்து இந்தியாவைக் குறிவைத்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த வெவ்வேறு துப்பாக்கிச் சண்டை சம்பவங்களில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து இந்திய ராணுவத் தலைமை ஜெனரல் எம்.எம்.நாரவனே ஏஎன்ஐயிடம் கூறியதாவது:
''இந்தியாவும் உலகின் பிற பகுதிகளும் கரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் நேரத்தில் பாகிஸ்தான் நாடு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது. இந்தியா தனது சொந்தக் குடிமக்களுக்கு மட்டுமல்ல, மருத்துவக் குழுக்களையும் மருந்துகளையும் அனுப்புவதன் மூலம் உலகிற்கே உதவியாக உள்ளது. ஆனால் இன்னொரு பக்கம் பாகிஸ்தான், பயங்கரவாதத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறது.
இந்த மாதத் தொடக்கத்தில், பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி வெற்றிகரமாகத் தோல்வியடைந்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் தீவிர ஆதரவு இல்லாமல் இந்தியாவுக்குள் தீவிரவாதிகளின் ஊடுருவல்கள் சாத்தியமில்லை.
உலகம் ஒரு தொற்றுநோயை எதிர்த்துப் போராடும்போது, நம் அண்டை நாடு தொடர்ந்து நமக்குத் தொல்லைகளைத் தூண்டுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது''.
இவ்வாறு எம்.எம்.நாரவனே தெரிவித்தார்.