கரோனா நோயாளிகளில் தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது மஸ்ஜித் மர்காஸ் சேர்ந்தவர்கள் என மத அடையாளம் வைத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிக்கை வெளியிடுவதை தடை செய்ய வேண்டும் எனக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யட்டுள்ளது
டெல்லியில் கரோனா வைரஸால் இதுவரை 1,640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,38 ேபர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் நிஜாமுதீ்ன் பகுதியில் தப்லீக் ஜமாத்தில் மதவழிபாடு மாநாட்டில் பங்கேற்றவர்களை கண்டுபிடிக்கும் வரை டெல்லியி்ல் கரோனாவின் தாக்கம் கட்டுக்குள் இருந்தது.
ஆனால் தப்லீக் ஜமாத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு பரிசோதனை செய்தபோதுதான் பலருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து நாள்தோறும் ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கும் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அறிவிக்கும் போது தப்லீக் ஜமாத்தோடு தொடர்புடையவர்கள், அவர்களோடு தொடர்பு வைத்தவர்கள் எனக் குறி்ப்பிட்டு வருகிறார்
கரோனா நோயாளிகளை மதத்தோடு தொடர்பு படுத்தி வகைப்படுத்துவதற்கு எதிராக டெல்லியைச் சேர்ந்த போஸ்யா ரஹ்மான், குவாயம் உத் தீன் ஆகியோர் சார்பில் வழக்கறிஞர் காஷ்யப் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்
அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது , “டெல்லியில் கரோனா நோயாளிகளை அவர்களின் மதத்தின் அடிப்படையில் முதல்வர் கேஜ்ரிவால் பிரித்துக் கூறுகிறார். இதைக் கேட்கும் மக்களிடம் அந்த குறிப்பிட்ட சமூகத்து மக்கள் மீது வெறுப்புணர்வு உருவாகும்.
ஏற்கெனவே டெல்லியில் சூழல் பதற்றமாக இருந்து வருகிறது, கடந்த மாதம்தான் வடகிழக்கு டெல்லியில் கலவரம் ஏற்பட்டு தற்போது அமைதி திரும்பியுள்ளது. இந்த சூழலில் இதுபோன்று மதத்தை தொடர்புபடுத்தி நோயாளிகளைப் பிரித்துக்கூறுவது இங்குள்ள நிலைமையை மேலும் மோசமாக்கும்.
கரோனா வைரஸுக்கு எதிரானப்போரில் தேசமே ஒற்றுமையாக இருந்து போராடி வருகிறது. இந்த நேரத்தில் கரோனா நோயாளிகளை மதத்தின் அடிப்படையில் பிரிக்கக்கூடாது. ஆதலால் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறித்து அரசு அறிவிக்கும் போதோ அல்லது முதல்வர் கேஜ்ரிவால் அறிவித்தாலோ தப்லீக் ஜமாத் பெயரைக் குறிப்பிட்டு நோயாளிகளை அடையாளப்படுத்துவதை தடை செய்ய வேண்டும். அதே தடுக்காமல் இருந்தால் முஸ்லிம் சமூகத்தை நோக்கி வன்மும், வெறுப்பும் பரவக்கூடும்
உலக சுகாதார அமைப்பு கூறிய விதிமுறைகளை மீறி முதல்வர் கேஜ்ரிவால், நோயாளிகளின் மதத்தின் அடிப்படையில் பிரித்து வகைப்படுத்துகிறார். இதை தடுக்க உத்தரவிட வேண்டும். டெல்லி் அரசும்,முதல்வர் கேஜ்ரிவாலும் கரோனா நோயாளிகளை அவர்களி்ன் மதம், குறிப்பிட்ட இடத்திலிருந்து வந்தவர்கள் என்று குறிப்பிடுவதை தடை செய்ய உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு வரும் 20-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.