இந்தியா

ஹேமமாலினி விளம்பரத்துக்கு தடை விதிக்க வேண்டும்: அஜித் சிங் கட்சியினர் புகார்

ஆர்.ஷபிமுன்னா

உத்தரப் பிரதேசத்தின் மதுரா தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர் ஹேமமாலினியின் விளம்பரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் புகார் தெரிவித்துள்ளது.

பாலிவுட்டின் நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங் களவை உறுப்பினருமான ஹேம மாலினி, உத்தரப் பிரதேசத்தின் ஆன்மிக நகரமான மதுராவில் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் ராஷ்டிரிய லோக்தளத் தின் சார்பில் கட்சித் தலைவர் அஜித் சிங்கின் மகன் ஜெயந்த் சௌத்ரி களமிறக்கப்பட்டுள்ளார். இவர், ஹேமமாலினிக்கு எதிராக மதுரா தேர்தல் அதிகாரியிடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்துள்ளார்.

இது பற்றி ராஷ்டிரிய லோக் தளத்தின் தேசிய செயலாளரான அணில் துபே, ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘வாட்டர் பில்டர்’ நிறுவனத்துக்காக ஹேமமாலினி மாடலாக நடித்துள்ள விளம்பரப் படம் டிவி சேனல்களில் வெளியாகி வருகிறது. பத்திரிகைகளிலும் நாள்தோறும் இந்த விளம்பரங்கள் வெளியாகின்றன. இது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாகும். இதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரியுள்ளோம் என தெரிவித்தார்.

இந்த விளம்பர செலவுகள் வேட்பாளரின் செலவுத் தொகையின் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் எனவும் துபே கூறினார்.

இது குறித்து மதுரா பாரதிய ஜனதாவினர் கூறுகையில், இந்த குறிப்பிட்ட விளம்பரப்படம் புதியது அல்ல. பல வருடங்களாக வெளியாகி வருகிறது. அப்படி யானால் ஹேமாஜி நடித்த இந்திப் படங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் எனக் கேட்பார்கள் போலுள்ளது’ என்றனர்.

SCROLL FOR NEXT