வாரணாசியில் இருந்து கிளம்பிய 127 தமிழர்களுக்கு ஆந்திராவுக்குள் நுழையத் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், அனைவரும் சென்னைக்கு சுமார் 7 மணிநேரம் தாமதமாக இன்று இரவில் வந்து சேரும் நிலை உருவாகியுள்ளது.
கரோனா ஊரடங்கால் உத்தரப்பிரதேசம் வாரணாசியில் பல நூறு தமிழர்கள் சிக்கினர். இவர்களில் 127 பேர் கடந்த 13-ம் தேதி இரவு, 3 பேருந்துகளில் புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
இவர்களுக்கு மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா மற்றும் தமிழகம் வரை தடையில்லாமல் செல்ல வாரணாசி மாவட்ட ஆட்சியர் மூலமாக அனுமதி கிடைத்திருந்தது. இதன்படி சென்று கொண்டிருந்த 3 பேருந்துகள், மகாராஷ்டிராவில் இருந்து தெலங்கானாவுக்குள் நேற்று நுழையும்போது தடுத்து நிறுத்தப்பட்டன.
அதிலாபாத்தின் சோதனைச் சாவடி அருகே தெலங்கானா போலீஸார் 3 பேருந்துகளை முன்னேறிச் செல்ல அனுமதிக்கவில்லை. அனுமதிச் சீட்டில் இருந்த பயணிகளின் பெயர்கள் அவர்கள் ஆதார் அட்டை அடையாளங்களுடன் சரிபார்க்கப்பட்டன.
பிறகு அனைவருக்கும் கரோனா மருத்தவப் பரிசோதனை செய்த பின் திரும்பிச் செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால், செய்வதறியாது திகைத்த தமிழர்களில் சிலர் தெலங்கானா ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜனின் அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டனர்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பயணியர்களில் சிலர் கூறும்போது, ‘மருத்துவப் பரிசோதனையில் எங்களில் யாருக்கும் கரோனா இல்லை எனத் தெரிந்தது. ஆளுநர் தமிழிசை அலுவலகத்தில் நிலைமையைக் கூறிய பின்னர் அனைவருக்கும் தமிழகம் திரும்ப உதவி கிடைத்தது. நேற்று இரவு 10 மணிக்குத் தொடர்ந்த பயணத்தால் சென்னை வந்துசேர்வது தாமதமாகிறது’ எனத் தெரிவித்தனர்.
தமிழகத்துக்குள் நுழையும் 127 பேரை ஆந்திர எல்லையான கும்மிடிப்பூண்டியுடன் நிறுத்துவதா? சென்னை வரை அனுமதிப்பதா? என்ற முடிவு இன்னும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதன் மீதான பேச்சுவார்த்தை தமிழகக் காவல்துறையின் உளவுத்துறைப் பிரிவு மற்றும் பயணியர் இடையே தொடர்கிறது.
இந்நிலையில், இன்று இரவு 127 பேரை இறக்கிவிட்டு, காலியாகத் திரும்பும் பேருந்துகளில் சென்னையில் இருந்து உத்தரப் பிரதேச மக்களை ஏற்றி அனுப்ப முயற்சி நடைபெறுகிறது.
எனினும் 127 பேரை இறக்கிய பின் 18-ம் தேதிக்கு முன்பாக 3 பேருந்துகளும் காலியாகவே வந்து சேர வேண்டும் என்பது வாரணாசியில் விதிக்கப்பட்ட நிபந்தனை ஆகும். இந்தத் தகவல் வாரணாசியில் இருந்து மீண்டும் ஒருமுறை 3 பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் காவலர்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.
இதனால், சென்னையில் சிக்கியுள்ள உ.பி.வாசிகள் ஏமாற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனினும், திரும்பிச் செல்லும் பேருந்துகளில் உ.பி.வாசிகளை அனுப்பும் முயற்சி தொடர்கிறது.