மொரோனா மாவட்டம் குமுர்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி திவாரி (25). இவர் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்துள்ளார். ஆனால், அப்பெண் காதலை ஏற்க மறுத்து விட்டார். இந் நிலையில் அப்பெண்ணுக்கு கடந்த 2-ம் தேதி திருமணமானது.
திருமணமான பிறகு, தன் தந்தை வீட்டுக்கு அந்தப் பெண் ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை, தன் சகோதரி மற்றும் தாயுடன் வெளியே சென்ற போது, ரவி அந்தப் பெண்ணை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.
சுடப்பட்ட பெண் முதலில் ஜாவ்ரா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர்சிகிச் சைக்காக குவாலியருக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே ரவி திவாரியின் உடல் குமுர்புர் கிராமத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் மீட்கப் பட்டுள்ளது. அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்திருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து விசாரணை நடக்கிறது.