இந்தியா

நீச்சல் குளத்தில் நேரத்தைக் கழித்த கரோனா பொறுப்பு அமைச்சர்: பதவி நீக்கம் செய்யுமாறு காங்கிரஸ் வலியுறுத்தல்

இரா.வினோத்

ஊரடங்கு சமயத்தில் நீச்சல் குளத்தில் குளித்து நேரத்தைக் கழித்த கர்நாடக மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் சுதாகருக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவ‌ரை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாா் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 230க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு சமயத்திலும் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவருவதால் மக்கள் நடமாட்டத்தைத் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கர்நாடக‌ மருத்துவக் கல்வித் துறை அமைச்சரும், கரோனா பொறுப்பு அமைச்சருமான‌ சுதாகர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில், ''நீண்ட காலத்துக்குப் பிறகு என் குழந்தைகளுடன் சேர்ந்து நீச்சல் அடித்தேன். அங்கும் சமூக இடைவெளியைப் பராமரித்தேன்.ஹா..ஹா..'' என்று குறிப்பிட்டிருந்தாா்.

இதற்கு காங்கிரஸ், மஜதவைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பாஜகவினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சுதாகர் சில மணி நேரங்களிலே அந்தப் புகைப்படத்தை நீக்கினார்.

இதற்கு கர்நாடக மாநில‌ காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா் , ''உலகமே கரோனா வைரஸ் பிரச்சினையில் சிக்கித் தவித்து வருகிறது. கர்நாடகாவில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் போதிய சிகிச்சை வசதிகள் இருக்கிறதா? என மக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான பொறுப்பை எடுத்துக்கொண்ட டாக்டா் சுதாகர், நீச்சல் குளத்தில் நேரம் செலவிட்டு இருப்பது பொறுப்பற்ற செயலாகும். அவரது இந்தச் செயல் தாா்மீக மற்றும் அரசியல் நெறிமுறைக்கு எதிரானது.

எனவே சுதாகர் உடனடியாக தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிடில் முதல்வர் எடியூரப்பா அவரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT