இந்தியா

ஷீனா போராவின் சடலம் தோண்டி எடுப்பு: டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்ப போலீஸார் திட்டம்

பிடிஐ

தனது தாயால் கொலை செய்யப் பட்ட ஷீனா போராவின் சடலத்தை தோண்டி எடுத்துள்ள மும்பை போலீஸார், உடல் பாகங்களை டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவின் ரெய்கட் மாவட்டம் பென் வட்டம் ககோட் புத்ரக் கிராமத் தில் ஷீனா போராவின் சடலம் புதைக்கப்பட்டுள்ளதாக கிராம போலீஸ் திட்டத்தின் கீழ் பணியாற் றும் கணேஷ் தானே என்பவர் தெரிவித்தார். இதையடுத்து நேற்று முன்தினம் காலையில் போலீஸாரும் தடயவியல் நிபுணர்களும் அந்த இடத்துக்குச் சென்று ஷீனாவின் உடல் பாகங்கள் சிலவற்றை தோண்டி எடுத்தனர். அதை எடுத்துக்கொண்டு மும்பை திரும்பினர்.

இதுகுறித்து மும்பை காவல் துறை ஆணையர் ராகேஷ் மரியா கூறும்போது, “ஷீனாவின் உடல் பாகங்கள் சிலவற்றை தோண்டி எடுத்துள்ளோம். அவற்றை டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்க உள்ளோம்” என்றார்.

இந்திராணியிடம் விசாரணை

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஷீனாவின் தாய் இந்திராணி முகர்ஜியும் அவரது கார் ஓட்டநரும் கடந்த 25-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்களை 31-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள கர் காவல் நிலையத்துக்கு நேற்று அழைத்து வரப்பட்ட இந்திராணியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்திராணியின் 2-வது கணவர் சஞ்சீவ் கண்ணாவும் ஷீனா கொலையில் தனக்கு உள்ள தொடர்பை ஒப்புக்கொண்டுள்ளார் என மும்பை மாகர காவல் துறை ஆணையர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார். முன்னதாக கொலைக்கும் தனக்கும் தொடர் பில்லை என கூறிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷீனா போராவை கொலை செய்வதற் காக பயன்படுத்திய காரை போலீ ஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

என்னையும் கொல்ல திட்டம்

ஷீனா கொல்லப்பட்ட அதே நாளில் என்னையும் குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கொலை செய்யத் திட்டமிட்டார் எனது தாய் இந்திராணி. நல்ல வேளையாக நான் தப்பி விட்டேன் என பரபரப்பு வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் இந்திராணியின் மகன் மைக்கேல் போரா.

இது குறித்து மும்பை போலீஸார் கூறியிருப்பதாவது:

இந்திராணியின் மகள் ஷீனா கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கழுத்தை நெறித்து கொல்லப்பட்டார். அதே நாளில் மகன் மைக்கேலையும் மும்பைக்கு வரவழைத்திருக்கிறார் இந்திராணி. ஷீனாவுக்கும் ராகுலுக்கும் திருமணம் செய்வது தொடர்பாக பேச வேண்டும் எனக் கூறி மும்பையின் ஒர்லியில் உள்ள தனது வீட்டுக்கு வரவழைத்தார் இந்திராணி.

மைக்கேல் அங்கு சென்றபோது, இந்திராணியின் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னாவும் உடன் இருந்துள்ளார். மைக்கேலுக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர். அதைக் குடித்ததும் தனக்கு மயக்கமாக இருப்பதாகக் கூறி படுத்துவிட்டார் மைக்கேல்.

ராகுலுடன் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, ஷீனாவையும் போன் செய்து கூப்பிட்டுள்ளார் இந்திராணி. இருவரையும் ஒரே இடத்தில் வைத்து கொலை செய்வதுதான் அவரது திட்டம். ஆனால் ஷீனா அங்கு வர மறுத்து விட்டார். இதனால் இருவரும் மைக்கேலை ரூமில் விட்டுவிட்டு, ஷீனாவைத் தேடிச் சென்றுள்ளனர். இந்த இடைவெளியில் மயக்கம் தெளிந்து எழுந்த மைக்கேல், அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாக வாக்குமூலம் அளித் திருக்கிறார். இவ்வாறு மும்பை போலீசார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT