கோப்புப்படம் 
இந்தியா

கரோனாவின் கைங்கர்யம்: உலகப் புகழ்பெற்ற கேரளாவின்  திருச்சூர் பூரம் திருவிழா முதல் முறையாக ரத்து

பிடிஐ

உலகப் புகழ் பெற்றதும் கேரளாவின் அனைத்துக் கோயில் திருவிழாக்களின் தாய்த் திருவிழா எனக் கருதப்படும் திருச்சூர் வடக்குநாதன் கோயில் பூரம் திருவிழா கரோனா வைரஸ் காரணமாக முதல் முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2 நூற்றாண்டுகளாக நடத்தப்பட்டு வரும் திருச்சூர் பூரம் திருவிழா இதுவரை ரத்து செய்யப்பட்டதே இல்லை. கடந்த 1798-ம் ஆண்டு கேரளாவின் ராஜா ராமா வர்மா என்ற கொச்சி மன்னர் சக்தான் தம்புரான் சார்பில் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.

பிரமேக்காவு, திருவெம்பாடி ஆகிய இரு கோயில்கள் சார்பில் இந்த பூரம் திருவிழா நடத்தப்படும். அதுமட்டுல்லாமல் பல்வேறு சிறு கோயில்களிலும் குட்டிபூரம், வாண வேடிக்கைகளுடன் நடக்கும். 50-க்கும் மேற்பட்ட யானைகள் அலங்கரிக்கப்பட்டும், செண்டை மேளங்கள் முழங்க நடத்தப்படும் இந்த பூரம் திருவிழா வரும் மே 2-ம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால், கரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3-ம் தேதி வரை நடைமுறையில் இருப்பதால் இந்த ஆண்டு பூரம் திருவிழாவை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள வேளாண் துறை அமைச்சர் வி.எஸ். சுனில் குமார் இன்று நிருபர்களிடம் கூறுகையில், “மாநில அரசு, இரு தேவஸம்போர்டு நிர்வாகிகள், கோயில் நம்பூதரிகள், ஆகியோர் சேர்ந்து நடத்திய ஆலோசனையில் இந்த ஆண்டு பூரம் திருவிழாவை ரத்து செய்வதாக ஒரு மனதாக முடிவு செய்துள்ளோம். கரோனா வைரஸ் காரணமாக வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு இருக்கிறது. அப்படியான சூழலில் மே 2-ம் தேதி பூரம் திருவிழாவை நடத்த முடியாது.

ஆனால், திருச்சூர் வடக்குநாதன் சிவன் கோயிலில் அன்றைய தினம் வழக்கமான பூஜைகள் நடக்கும். 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், பக்தர்களுக்கு அனுமதியில்லை . மேலும், திருச்சூர் பூரம், பொருட்காட்சி, மினி பூரம் அது சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.

இதற்கு முன் பூரம் திருவிழா ரத்து செய்யப்பட்டதே இல்லை என்று கோயில் சார்பில் தெரிவிக்கப்பட்டாலும், கடந்த 1948-ம் ஆண்டு மகாத்மா காந்தி கொல்லப்பட்டபோதும், சீனப் போரின்போதும் திருவிழாநடக்கவில்லை என சிலர் தெரிவிக்கிறார்கள்.

SCROLL FOR NEXT