கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மையம் அண்மையில் ‘ஆரோக்கிய சேது' செயலியை அறிமுகம் செய்தது. இதனை ஆண்டிராய்ட், ஐ போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, வங்க மொழி, ஒரியா, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட 11 மொழிகளில் செயலி செயல்படுகிறது.
‘ஆரோக்கிய சேது' செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்த பிறகு, உங்களின் செல்போன் எண், வயது, பாலினம், இருப்பிடம் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும். கரோனா வைரஸ் தடுப்புக்காக சேகரிக்கப்படும் இந்த தகவல்கள், வேறு காரணங்களுக்கு பயன்படுத்தப்படவும் வாய்ப்புள்ளது என்று ‘இன்டர்நெட் பிரீடம் பவுண்டேசன்' தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் கூறும்போது, ‘ஆரோக்கிய சேது செயலியை மாநிலங்களுக்கு இடையிலான பயணத்துக்கு ‘இ-பாஸ்' ஆக பயன்படுத்தலாம்' என்று கூறியது நினைவுகூரத்தக்கது.
ஐரோப்பிய நாடுகளிலும் கரோனா வைரஸ் பரவலை தடுக்க இதுபோன்ற செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. எனினும் செயலியை பயன்படுத்துவோரின் அந்தரங்க உரிமையை பாதுகாக்கும் நடைமுறைகள் அங்கு கண்டிப்புடன் பின்பற்றப்படுகின்றன.
‘‘கரோனா வைரஸ் தடுப்பு பணி தவிர்த்து வேறு எந்த பணிக்கும் பயன்பாட்டாளர்களின் விவரங்களை பயன்படுத்தக்கூடாது. இதுதொடர்பாக அவ்வப்போது ஆய்வு நடத்த வேண்டும். விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்’’ என்று ஐரோப்பிய ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
ஆனால் ‘ஆரோக்கிய சேது' செயலி விவகாரத்தில் அந்தரங்க கொள்கைகள், பயன்பாட்டு விதிகள் குறித்து எவ்வித சட்ட வரையறையும் இல்லை. பயன்பாட்டாளர்களின் தகவல்கள் எந்த துறை, எந்தெந்த அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகிறது என்ற விவரம் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.
கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நல்லெண்ணத்தில் ‘ஆரோக்கிய சேது' செயலி வெளியிடப்பட்டிருந்தாலும் அந்த செயலியை பயன்படுத்துவோரின் அந்தரங்க உரிமையை பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ‘இன்டர்நெட் பிரீடம் பவுண்டேசன்' உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.