கரோனா காரணமாக அமலில் உள்ள ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு தொழில்களை மீண்டும் முழுவீச்சில் தொடங்குவதற்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று தொழில்துறை நிறுவனங்களுக்கு கட்காரி உறுதி அளித்துள்ளார்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று, இந்தியத் தொழில் வணிகக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று பேசினார். அப்போது அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நிதி சார்ந்த முடிவுகள் குறித்து தெரிவித்தார்.
குறித்த கால கடன்கள் மற்றும் தொழிலைத் தொடர்ந்து நடத்துவதற்கான பணி மூலதனக் கடன்கள் ஆகியவற்றை மறுசீரமைப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது என்றும் கட்காரி தெரிவித்தார்.
சிறு, குறு, நடுத்தரத்தொழில்கள் பற்றி பேசிய திரு.கட்காரி, அவர்களின் சிரமங்கள் குறித்தும், நாட்டின் பொருளாதாரத்திற்கு அவர்கள் எவ்வளவு முக்கியம் என்பதையும் அரசு அறியும் என்றும் கூறினார். அரசு மற்றும் வங்கித் துறையுடன் இணைந்து, தொழில்துறை பணியாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு துறையின் நலனுக்காகவும் அனைத்து துறைகளும் திடமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
சந்தையில் பணப்புழக்கம் இருக்க வேண்டியதன் அவசியம் பற்றி பேசிய அமைச்சர், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உறுதித்தொகையை தற்போதைய ஒரு லட்சம் கோடியில் இருந்து 5 லட்சம் கோடியாக அதிகரிக்க முயன்று வருவதாகவும் கூறினார்.
நிதி நிறுவனங்களால் அளிக்கப்படும் கடன் தொகையில் 75 சதவீதம் அரசாங்கத்தின் கடன் உறுதி திட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். தொழில் துறையால் குறிப்பாக குறு,சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களால் எழுப்பப்படும் பிரச்சினைகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் விவாதிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
சில நாடுகள், தங்களது முதலீடுகளை சீனாவில் இருந்து எடுத்து விட நினைக்கின்றன; இந்தியா அவர்களின் சிறந்த முதலீட்டுத் தளமாக இருக்க முடியும்; எனவே, இந்தியத் தொழில் துறையினர், தற்போதைய நெருக்கடியான நிலைமையை, ஒரு சவாலாகவும் ஒரு வாய்ப்பாகவும் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
நெடுஞ்சாலைத் துறை பற்றிப் பேசிய அவர், 2019-20 -இல் நெடுஞ்சாலைக் கட்டுமானப் பணிகள் சாதனை அளவை எட்டியிருந்தன, கட்டமைப்புத் துறையின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இது, வரும் ஆண்டுகளில், இரண்டு மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.