கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் லாக் டவுனை 2-வது முறையாக மே 3-ம் தேதி வரை பிரதமர் மோடி நீட்டித்தது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட கடினமான முடிவு என்று உலக சுகாதார அமைப்பு புகழாரம் சூட்டியுள்ளது.
கரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதைத் தடுக்கவும், அதன் பரவல் சங்கிலியை உடைக்கவும் கடந்த மாதம் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்கள் லாக் டவுனை பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், கரோனா வைரஸ் கட்டுக்குள் இருந்தாலும், பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வந்தது.
21 நாட்கள் லாக் டவுன் இன்று முடியும் நிலையில் மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் லாக் டவுனை மே 3-ம் தேதி வரை நீட்டித்து அறிவித்தார்.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் மண்டல இயக்குநர் மருத்துவர் பூனம் கேத்ராபால் சிங் கூறுகையில், “கரோனா வைரஸ் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதமர் மோடி லாக் டவுனை 2-வதமுறையாக நீட்டித்தது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட கடினமான முடிவு. இப்போது எண்ணிக்கையைப் பற்றிப் பேசுவது இயலாது.
ஆனால், பிரதமர் மோடியின் 6 வார லாக் டவுன் நிச்சயம் பலன் அளிக்கும். மக்களிடையே சமூக விலகல், சுகாதார நடவடிக்கை, நோயாளிகளைக் கண்டறிதல், பின்தொடர்தல், தொடர்புள்ளவர்களைக் கண்டுபடித்தல் போன்றவை மூலம் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியும்.
மிகப்பெரிய பன்முகச் சவால்கள் இருந்தாலும், கரோனா வைரஸுக்கு எதிரான போரில் இந்தியா முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு போராடி வருகிறது. இந்த சோதனைக் காலத்தில் அதிகாரிகளும், சுகாதாரப் பணியாளர்களுடன் மக்களும் ஒத்துழைக்கிறார்கள். இந்த நேரத்தில் ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்து, ஒருங்கிணைந்து கரோனா வைரஸைத் தோற்கடிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.